Thursday, December 25, 2008

மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை, உண்மை பேசியது எப்படி?.- போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள்!.


மும்பை, டிச.26-

மும்பையில் நடந்த தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட அஜ்மலை, போலீசார் உண்மையை கக்க வைத்தது எப்படி? என்பது பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.


பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய கோர தாக்குதலின்போது, அஜ்மல் என்ற தீவிரவாதி மட்டுமே உயிருடன் பிடிபட்டான். காயம் அடைந்த அவனுக்கு சிகிச்சை அளித்து, உரிய முறைப்படி மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

பொதுவாகவே லஸ்கர் இ தொய்பா இயக்கத்தினர், தற்கொலைப்படைக்கு தேர்வு செய்யும் தீவிரவாதிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் உண்மையை கக்கிவிடாதபடி மூளைச்சலவை செய்து, கடுமையான பயிற்சிகளை அளிப்பது வழக்கம். விசாரணையின் தொடக்கத்தில் அஜ்மலிடம் அந்த பயிற்சிகளின் முரட்டுத்தனத்தை பார்க்க முடிந்தது.


எனவே, அஜ்மலிடம் இருந்து உண்மைகளை கறக்க புதிய தந்திரத்தை கையாண்டனர். இரு பிரிவாக போலீசாரை அனுப்பி அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் மிகவும் முரட்டுத்தனமாக விசாரணை நடத்தினார்கள். அதற்கு மாறாக, மற்றொரு பிரிவு அதிகாரிகள் அவனுக்கு சலுகை காட்டுவது போல் கருணையுடன் நடந்து கொண்டனர்.

இந்த மாறுபட்ட விசாரணையின் மூலம் அஜ்மலின் பலம், பலவீனம் இரண்டையும் நன்றாக எடை போட்டு குறிப்பு எடுத்துக்கொண்டனர். அஜ்மல், பஞ்சாப் மாகாணத்தை (பாகிஸ்தான் பகுதியில் உள்ளது) சேர்ந்தவன். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே உரித்தான `உணர்வுபூர்வ'மாக அஜ்மல் இருந்தான்.

அத்துடன், அவனுடைய தாய் மீதும், தாய் மொழியான பஞ்சாபி மீதும் தனிப்பற்று இருந்ததையும் போலீசார் கண்டுகொண்டு தந்திரமாக காய் நகர்த்த தொடங்கினார்கள். பஞ்சாபி மொழி தெரிந்தவர் மூலம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதிர்ஷ்டவசமாக, மும்பை குற்றப்பிரிவு இணை கமிஷனர் ராகேஷ் மரியாவே ஒரு பஞ்சாபிக்காரர்தான். அஜ்மலை விசாரிக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டார்.

மணிக்கணக்கில் அவனுடன் சகஜமாக பஞ்சாபியில் உரையாடி, அஜ்மலை தனது வழிக்கு கொண்டு வந்தார், அவருடைய கனிவான விசாரணைக்கு கைமேல் பலன் கிடைக்கத்தொடங்கியது. முதலில் தனது தாயாருடன் பேச வேண்டும் என்ற விருப்பத்தை அஜ்மல் வெளியிட்டான். அவன் எப்போது சலுகைகளை எதிர்பார்க்கத் தொடங்கினானோ, அப்போதில் இருந்தே தங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டதாக போலீசார் கருதினார்கள்.

அஜ்மலின் தாயாருடன் போனில் பேசுவதற்கு தங்களால் அனுமதி வழங்க முடியாது. ஆனால், கடிதம் எழுதினால் அதை அனுப்பி வைக்கிறோம் என்று கூறிய ராகேஷ் மரியா, விடுதலையாகி தாயாரை சென்று பார்ப்பதற்காக சட்ட உதவி அளிக்கும்படி உனது நாட்டுக்கும் (பாகிஸ்தான்) கடிதம் எழுதலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

அதன்படிதான், அவனுடைய தாயாருக்கும், பாகிஸ்தான் தூதருக்கும் கடிதம் எழுத வைத்து அஜ்மல் பாகிஸ்தானி என்பதற்கான வலுவான ஆதாரத்தை போலீசாரால் பெற முடிந்தது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

No comments: