Friday, December 19, 2008

"டைரக்டர் சீமான் கைது" - டிச.31-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு!.


ஈரோடு, டிச.20-

சினிமா டைரக்டர் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகிற 31-ந்தேதி அவரை சிறையில் அடைக்கும்படி, மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி சமீபத்தில் ராமேசுவரத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் பேசினார்கள். தீவிரவாதத்தை தூண்டும் வகையில், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை அவர்கள் இருவரும் ஆதரித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதைத்தொடர்ந்து கைதான டைரக்டர்கள் சீமான், அமீர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் டைரக்டர் சீமான் பேசினார். அந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு புகார் கூறி இருந்தார். சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று, அவர் வலியுறுத்தி இருந்தார்.


இந்த நிலையில், சீமானின் பேச்சுவன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக ஈரோடு போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டைரக்டர் சீமான், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே `மாயாண்டி குடும்பத்தினர்' சினிமா படப்பிடிப்பில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள் தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து டைரக்டர் சீமானை கைது செய்யும்படி தெரிவித்தனர். தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் உடனடியாக சினிமா படப்பிடிப்பு நடந்த ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி வீட்டுக்கு சென்றனர்.


அங்கு நிச்சயதார்த்த காட்சி படப்பிடிப்புக்காக தயாராக இருந்த டைரக்டர் சீமானை போலீசார் கைது செய்தனர். அவருடன் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி மற்றும் உதவியாளரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

பின்னர் போலீஸ் ஜீப்பில் ஈரோட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட சீமான் அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.


மாஜிஸ்திரேட்டு அசோகன், டைரக்டர் சீமானை வருகிற 31-ந்தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்பின் போலீசார் சீமானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

சீமான் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலவரத்தை உண்டாக்கும் விதத்தில் பேசுதல்) மற்றும் 13 (1) (பி) (இந்திய இறையாண்மைக்கு எதிராக இன்னொரு நாட்டு பகுதியுடன் இணைத்தோ பிரித்தோ பேசுவது, சட்டவிரோத செயல்களை தூண்டும் விதத்தில் அல்லது உடந்தையாக பேசுவது) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில், 2-வது குற்றப்பிரிவு ஜாமீனில் விட முடியாத பிரிவு ஆகும். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



டைரக்டர் சீமான் கலந்துகொண்ட ஈரோடு கூட்டத்தில் பேசிய பெரியார் திராவிட கழக மாநில தலைவர் கொளத்தூர் மணியும் அதே சட்டப்பிரிவுகளின் கைது செய்யப்பட்டு, ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 31-ந்தேதி வரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார்.

முன்னதாக, நேற்று மதியம் 2 மணியளவில் மேட்டூரில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 14-ந் தேதி தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பில் ஈரோட்டில் ஈழத்தமிழர் ஆதரவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், அவர்கள் படும் அவலநிலை குறித்தும் பேசினோம். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டோம்.

"வைகோ வழக்கிலேயே தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. இருப்பினும் தமிழக அரசு தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. காங்கிரசாரின் நெருக்கடியால் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக கருதுகிறேன்."

இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.

கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் அவருடைய ஆதரவாளர்கள் மேட்டூர், பொன்நகரில் திரண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக மேட்டூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

No comments: