Thursday, December 11, 2008

புதிய தேசிய புலனாய்வு அமைப்பு உருவாக்கப்படும் பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் அறிவிப்பு


புதுடெல்லி, டிச.12-
புதிதாக தேசிய புலனாய்வு அமைப்பை உருவாக்க நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீசாருக்கு தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, மும்பை தாக்குதல் பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பாராளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மும்பையில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பலே, மேஜர் சந்தீப் ஆகியோரின் வீர சாகசம் பாராட்டத்தக்கது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் அத்தகைய துணிச்சலை காட்ட முடியாது. ஆனால் நாம் ஒற்றுமையாக செயல்படலாம்.

மும்பை தாக்குதலில் ஈடுபட்டது, நமது அண்டை நாடான பாகிஸ்தான்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. மும்பைக்குள் ழைந்த 10 தீவிரவாதிகளும் எங்கிருந்து வந்தார்கள் என்பதும் உறுதியாக தெரிய வந்துள்ளது. பிடிபட்ட ஒரே தீவிரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தீவிரவாதிகள் வந்த ரப்பர் படகு, பலியான தீவிரவாதிகளின் உடல்கள் ஆகியவற்றில் கிடைத்த ஆதாரங்கள் மூலம், தீவிரவாதிகள் வந்ததில் இருந்து பலியானது வரையிலான சம்பவங்களை கிரகிக்க முடிந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்த தீவிரவாத சம்பவங்களுக்கு இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத இயக்கங்கள்தான் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் உளவுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் நான் ஆய்வு செய்தேன். இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். பொதுவாக, உளவுத்துறை தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மற்ற அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆனால், சில தகவல்கள் நடவடிக்கைக்கு உகந்தவை அல்ல என்று நிராகரிக்கப்படுவது, எனது கவனத்துக்கு வந்துள்ளது.

தாக்குதலுக்கு முன்பு, லஸ்கர்-இ-தொய்பாவின் கப்பல், இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதுபற்றி முன்கூட்டியே கடலோர காவல்படைக்கும், கடற்படை உளவுப்பிரிவுக்கும் தகவல் சொல்லி எச்சரித்துள்ளது. உடனே கடலோர காவல் படையினர், கப்பல் மற்றும் விமானம் மூலம் அந்த கப்பலை தேடியுள்ளனர். ஆனால் முடியவில்லை. கடற்படை, அந்த கப்பல் பாகிஸ்தான் கடல் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தது. அதையடுத்து, கடந்த மாதம் 19 மற்றும் 20-ந் தேதிகளில் விமானம் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது.
ஆனால், அதன்பிறகு உளவுத்துறையிடம் இருந்து மேற்கொண்டு தகவல்கள் வராததால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கண்காணிப்பு முயற்சியை கைவிட்டு விட்டது. இதன்மூலம் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் செயல்பட வேண்டிய பொறுப்பு சிதறடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டைகள் அடைக்கப்படும்.

உளவுத்துறை தகவல்கள் திறம்படவும், நடவடிக்கைக்கு உகந்தவையாகவும் இருக்க வேண்டும். அந்த தகவல்கள் மற்ற படையினருடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். உளவுத்துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். அவர்களுக்கு நவீன தொழில்ட்ப சாதனங்கள் அளிக்கப்படும்.
மும்பை தாக்குதலை கவனத்தில் கொள்ளும்போது, நாம் வழக்கம்போல் நமது அன்றாட அலுவல்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்து வரும் மாதங்களில் நான் சில கடுமையான முடிவுகளை மேற்கொள்ளப்போகிறேன். அவை தீவிரவாத சவால்களை சந்திக்க மக்களை தயார்படுத்துவதாக அமையும்.
மும்பை தாக்குதல் காரணமாக, நமது கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது 7,500 கி.மீ. நீள கடல் எல்லையை பாதுகாக்க, விசேஷ கடலோர படையை உருவாக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத செயல்களை தடுப்பதற்கும், விசாரிப்பதற்கும், வழக்கு நடத்துவதற்கும், தண்டனை அளிப்பதற்கும் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளை பலப்படுத்த சில மசோதாக்கள் கொண்டு வரப்படும். இதுகுறித்து மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறோம். அந்த வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான மசோதா, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
இதுபோல், தீவிரவாதிகளுக்கு பணம் வருவதை தடுப்பதற்காக, பண மோசடி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படும். இவற்றை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.

தீவிரவாதிகளுடன் போரிட பயிற்சி பெற்ற ஒரே அமைப்பாக தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) உள்ளது. ஆனால் அப்படையினர் தாக்குதல் நடக்கும் இடத்துக்கு வருவதற்கு சில சிரமங்கள் உள்ளன. அரியானாவில் உள்ள அவர்களது முகாமுக்கும், விமான நிலையத்துக்கும் இடையே தூரம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தனி விமானம் இல்லை. சண்டை நடக்கும் இடத்தில் போதிய வசதிகளும் கிடைப்பது இல்லை.
இவற்றை கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.எஸ்.ஜி. முகாம்கள் அமைக்கப்படும். அதற்கு முன்பாக, மற்ற ஆயுதப்படைகளின் கமாண்டோ படை முகாம்கள், பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
தீவிரவாதிகளுடன் போரிடுவதற்காக, மாநில போலீசின் கமாண்டோ படையினருக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, பல்வேறு இடங்களில் 20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும். இந்திய ரிசர்வ் பட்டாலியன்களில் 2 கம்பெனி வீரர்கள், சிறப்பு கமாண்டோ வீரர்களாக உருவாக்கப்படுவார்கள்.

மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கடந்த 27-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை காப்பாற்ற பாடுபடுவோம். அதை செயல் வடிவம் ஆக்க எங்கள் நாடி நரம்புகளையும் வருத்திக்கொள்வோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

No comments: