Friday, December 26, 2008

சுனாமி நினைவுநாள் (4ம் ஆண்டு) கடலோரத்தில் கண்ணீர் அஞ்சலி!.


தமிழக கடலோர பகுதிகளை கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். நாகையில் 6,000 பேர் இறந்தனர். சுனாமி நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வர்த்தகர் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி ஆர்ச்சில் இருந்து சுனாமி நினைவு ஸ்தூபி வரை மவுன ஊர்வலம் நடந்தது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி, மாலைகள் மற்றும் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாகை ஏழைப்பிள்ளையார் கோயிலில் இருந்து கடற்கரை வரை ஊர்வலமாகச் சென்ற நம்பியார் நகர் மக்கள், கடலை நோக்கி மணலை வாரி இறைத்து கதறி அழுதனர்.
நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகள் 29 பேர் மற்றும் ஒரு ஆசிரியை உட்பட சுனாமியில் பலியான 30 பேரின் புகைப்படங்களை வைத்து மலரால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமரி மாவட்டம்: சுனாமி பேரலையால், குமரி மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். கொட்டில்பாடு கிராமத்தில் மட்டும் குழந்தைகள் உட்பட 199 பேர் இறந்தனர். இவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்த மயானத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
பலியானவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியிலும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி கடற்கரையில் சுனாமி நினைவு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள நினைவு ஸ்தூபியில் கலெக்டர் ராஜேந்திரகுமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரேஸ்புரம், மாதவநாயர்காலனி முத்தரையர் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள், குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்: கடலூர் சேவை இல்லத்தில் சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் சிங்காரவேலனார் முன்னேற்றக் கழகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்து கடற்கரைக்கு மவுன ஊர்வலம் நடந்தது.
புதுவை: புதுவை மாநில மீனவர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி கடற்கரை காந்தி சிலை அருகே நடந்தது.
காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி உட்பட ஏராளமானோர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி நினைவு தினத்தையட்டி நாகை, கடலூர், குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

No comments: