Tuesday, December 30, 2008

கர்நாடகாவில் எட்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில்,ஆளுங்கட்சியான பா.ஜ., பெரும்பான்மை பலம்.


பெங்களூரு :

கர்நாடகாவில் எட்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், எட்டு தொகுதிகளிலும், காங்., கட்சி படு தோல்வி அடைந்தது. ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியான பா.ஜ., பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. மூன்று தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 சட்டசபைத் தொகுதிகளில், 110 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ., கடந்த மே மாதம் பதவியேற்றது. அறுதிப் பெரும்பான்மை பெற, மேலும் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தக் குறைவை ஈடுகட்ட, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் ஆதரவு அளித்தனர். எதிர்க்கட்சிகளான ம.ஜ.த.,வும், காங்கிரசும் இணைந்து, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களை விலைபேச ஆரம்பித்தனர். இதையறிந்த பா.ஜ., மாற்று வழியைக் கையாண்டது. "ஆபரேஷன் கமலா' என்ற திட்டத்தில், ம.ஜ.த.,வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களையும், காங்கிரசைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களையும் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, பாரதிய ஜனதாவில் சேர்த்துக் கொண்டது.


காலியான இந்த ஏழு சட்டசபைத் தொகுதிகளுக்கும், மத்தூர் தொகுதி ம.ஜ.த., உறுப்பினர் சித்தராஜு மறைவால் ஏற்பட்ட காலி இடத்திற்கும் சேர்த்து, மொத்தம் எட்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு 27ம் தேதி, இடைத்தேர்தல் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று துவங்கியது. ஹூக்கேரி, அரபாவி, தேவதுர்கா, தொட்டபல்லாபூர், கார்வார் ஆகிய ஐந்து தொகுதிகளில், பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதனால், சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை இடத்தைப் பெற்றுள்ளது. மதுகிரி, மத்தூர், துருவகரே ஆகிய மூன்று தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றது.


கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், இந்த எட்டு தொகுதிகளிலும், பாரதிய ஜனதாவுக்கு எந்த இடமும் இல்லை. தற்போது பெற்ற வெற்றியின் மூலம், ஐந்து தொகுதிகளில் பாரதிய ஜனதா தனது முத்திரையைப் பதித்துள்ளது. ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது; மூன்று தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில், கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற துருவகரே என்ற தொகுதியை இம்முறை ம.ஜ.த., தட்டிப்பறித்தது. எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.


மதுகிரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா, முதன் முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகிறார். இடைத்தேர்தலில் போட்டியிட்ட, ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள, உமேஷ் கட்டி, பாலச்சந்திர ஜார்கிஹோளி, சிவண்ண கவுடா நாயக், ஆனந்த் அஸ்னோதிகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


துருவகரே தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் லட்சுமி நாராயணா வெற்றி வரிசையில் இருந்தார். கடைசி நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னுக்கு வந்த செய்தியைக் கேட்டவுடன் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் சகோதரர் மகன் குருசரண், மத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அவருக்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இந்தத் தொகுதி, முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் சொந்த தொகுதி.


சமீபத்தில் நடந்த ஆறு மாநில தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் காங்., வெற்றி பெற்றாலும், இக்கட்சியின் ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடகாவிலும் இக்கட்சி பலம் இழந்து வருவதை, நேற்றைய தேர்தல் முடிவு காட்டி விட்டது.

No comments: