Sunday, December 28, 2008

திருமங்கலத்தில் (தி.மு.க- அ.தி.மு.க.) பயங்கர மோதல்



திருமங்கலம் தொகுதியில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. 20 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

திருமங்கலம், டிச.29-

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதியில் வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. திருமங்கலம் மற்றும் தொகுதியில் உள்ள கிராமங்களில் தேர்தல் அலுவலகங்களை திறந்தும், `பூத்'கள் அமைத்தும் தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

நேற்று அங்கு இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு செக்கானூரணி அருகே புளியங்குளத்தில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தனர். நேற்று காலை அங்கு வந்தவர்கள் அ.தி.மு.க.வினரின் 2 கார்களை அடித்து நொறுக்கினர். இதில் ஒரு கார், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதேபோல் கே.மீனாட்சிபட்டியிலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

இதுகுறித்து புளியங்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் முத்தன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேனி மாவட்ட தி.மு.க.செயலாளர் மூக்கையா, திருமங்கலம் யூனியன் தலைவர் கொடி.சந்திரசேகர், புளியங்குளம் ஊராட்சி தலைவர் பாண்டியராஜன், மதுரை மாநகராட்சி 3-ம் பகுதி செயலாளர் ஒச்சுபாலு, 4-ம் பகுதி செயலாளர் ஜெயராமன், புளியங்குளம் ஒன்றிய கவுன்சிலர் கோபு உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி இடையே உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்களை தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பார்வையிட்டவாறு சென்றார்.

பன்னீர்க்குண்டு என்ற ஊர் அருகே சென்றபோது அவரது காரை ஒரு கும்பல் மறித்தது. காரில் இருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட அ.தி.மு.க.வினர் இறங்கினர். அப்போது அந்த கும்பல் கற்களை வீசியதால் காரில் இருந்து இறங்கி அவர்கள் தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து புகார் செய்ய அ.தி.மு.க.வினர் சிந்துபட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அதேசமயம், கல்வீச்சு நடத்தியவர்களும் அங்கு சென்றனர்.

போலீஸ் நிலையம் அருகே சென்றபோது இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் சின்னமனூர் நகர அ.தி.மு.க. பொருளாளர் வேதநாயகம் (வயது 57) என்பவருக்கு பல் உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் பன்னீர்க்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் கொடிவயிரவன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருமங்கலம் 23-வது வார்டு பகுதியில் நடந்த மோதலில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். தூத்துக்குடியை சேர்ந்த ரவி (வயது 36) என்பவர் வெட்டப்பட்டார். ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பழனிச்சாமி (57) என்பவர் கல்வீச்சில் காயம் அடைந்தார்.

இவர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

திருமங்கலம் பகுதியில் உள்ள கீழஉரப்பனூர் இந்திராநகர், நெடுங்குளம், சந்தைப்பேட்டை, கொக்குளம், ஆலம்பட்டி, உலகானி ஆகிய பகுதிகளில் நேற்று காலை வாக்காளர்களை சிலர் ரகசியமாக சந்தித்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கு திரண்டு சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் அங்கிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஆண்டிபட்டி ராஜ்குமார், சேலம் மாதேசுவரன், ரவிச்சந்திரன், கோவை செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சத்தியானந்தம், தூத்துக்குடி செல்வம், போடி பிரவிண்குமார், பாலகருப்பு, நெல்லை ஏசுதுரை, முஜிபுர்ரகுமான், நம்பிராஜன், சங்கர், முத்துவிஜயன் உள்பட 14 பேரை தி.மு.க.வினர் பிடித்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி அவர்களை திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி தி.மு.க.வினர் ஒப்படைத்த 14 பேரிடம் முகவரியை வாங்கிக்கொண்டு அவர்களை விடுவித்தனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் எம்.பி.தங்கதமிழ்ச்செல்வன், எஸ்.பி.எம்.சையதுகான், ராஜன்செல்லப்பா மற்றும் அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.

"தி.மு.க.வினர்தான் அ.தி.மு.க.வினரை தாக்கினார்கள். 14 பேர் மீது பொய்யான புகார் கூறி அவர்களை தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்'' என்று கூறினார்கள்.

அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமங்கலம் நகர் பகுதியில் ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று காலை அங்கு வந்த ஒரு கும்பல் பழனிச்சாமியின் காரை தாக்கியதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

திருமங்கலம் நகராட்சி 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் விஜயனையும் தாக்க முயற்சி நடந்தது. அவரது அலுவலகமும் ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற மோதல்களில் மொத்தம் 20 கார்கள் நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவங்களை தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் திருமங்கலம் நகர் மற்றும் தொகுதியில் உள்ள கிராமங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் நேற்று திருமங்கலம் தொகுதி தேர்தல் பார்வையாளர் சுனில்குமார் குஜுரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் தங்கள் கட்சியினரை தி.மு.க.வினர் தாக்கியதாக அ.தி.மு.க.வினரும் தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

No comments: