Thursday, December 18, 2008

மும்பையில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல், பாகிஸ்தானைச் சேர்ந்தவன் இல்லை" - அதிபர் சர்தாரி!.




இஸ்லாமாபாத், டிச.19-

மும்பையில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல், பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த மாதம் 26-ந் தேதி அன்று தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மலிடம் விசாரணை நடந்தபோது இந்த தகவல்கள் கிடைத்தன. அஜ்மலின் சொந்த ஊர், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருப்பதும் தெரிய வந்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை சேர்ந்த விசாரணை அதிகாரிகளும் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோரும், `மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளே காரணம்' என்று தெரிவித்துள்ளனர். முதலில் இதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, தற்போது அதை மறுத்துள்ளார்.

இது குறித்து பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் மும்பை தாக்குதலுக்கு காரணம் என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலை நாடுகளைச் சேர்ந்த விசாரணை அமைப்புகளும் ஆதாரங்களை அளிக்கவில்லை. மும்பை தாக்குதலின்போது பிடிபட்ட முகமது அஜ்மலும் கூட பாகிஸ்தானைச் சேர்ந்தவன்தான் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவனுடைய தந்தை பாகிஸ்தானில் இருக்கிறார் என்றுதான் கூறப்படுகிறது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, எந்தவித தீவிரவாத செயலிலாவது ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? அப்படி இருந்தால் அதை நான் உறுதியாக ஆய்வு செய்வேன்.

மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்திய வெளியுறவு மந்திரியும் இதையே கூறி உள்ளார். முறையான விசாரணை முடியும்வரை நாம் பொறுத்து இருக்க வேண்டும். உறுதியான ஆதாரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த சம்பவத்தில் கூட்டு விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொள்கிறது.

விசாரணையின் முடிவில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அப்போது அது குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற ஜனநாயகம் உள்ள பாகிஸ்தானில், அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு அமைப்பை நீங்கள் தடை செய்தால் வேறு பெயரில் அந்த இயக்கம் செயல்படும்.

இவ்வாறு சர்தாரி தெரிவித்தார்.