Tuesday, December 23, 2008

"மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான கார்கரே மரணத்தில் சதித்திட்டம் இல்லை".- அந்துலே குற்றச்சாட்டை மறுத்து பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் அறிக்கை


புதுடெல்லி, டிச.24-

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் கார்கரே பலியான விவகாரத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை என்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் மராட்டிய மாநில தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹேமந்த் கார்கரேவும் ஒருவர். இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்குர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வந்தார். இதனால் அவரை இந்து அமைப்புகள் விமர்சித்து வந்தன.

இந்த சூழ்நிலையில் கார்கரே, தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானதால், அவரது மரணத்தில் சதித்திட்டம் இருப்பதாக மத்திய மந்திரி ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் தெரிவித்தார். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்துலேவை பதவி நீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.


எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ஹேமந்த் கார்கரே மரணத்துக்கான சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முன்வந்தார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி எழுந்து, `ஹேமந்த் கார்கரே மரணத்துக்கான சூழ்நிலை குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை, அந்துலே கருத்தை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுங்கள்' என்றார்.

அதற்கு சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, `உள்துறை மந்திரி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அதுபற்றி கருத்து கூறுங்கள்' என்று அத்வானியை கேட்டுக்கொண்டார். அதை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் கூச்சல் எழுப்பினர்.

கூச்சலுக்கு இடையே, அறிக்கை தாக்கல் செய்யுமாறு ப.சிதம்பரத்தை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்வானியும், பா.ஜனதா கூட்டணி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.


ப.சிதம்பரம் அறிக்கை வாசிக்க தொடங்கியவுடன், பா.ஜனதா கூட்டணி உறுப்பினர்கள் மீண்டும் சபைக்குள் நுழைந்தனர். தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். ப.சிதம்பரம், அறிக்கையின் பாதிப்பகுதியை வாசித்து விட்ட நிலையில், கூச்சல்-குழப்பம் நீடித்ததால், வாசிப்பதை நிறுத்தி விட்டு, அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ப.சிதம்பரத்தை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ப.சிதம்பரம் அறிக்கையை தாக்கல் செய்தவுடன், சபையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மரணத்துக்கு முன்பு, கார்கரே விசாரித்து வந்த ஒரு தீவிரவாத வழக்கின் (மாலேகான்) விசாரணை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. மரணத்துக்கு பிறகு, அவர் கொல்லப்பட்ட சூழ்நிலை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. என்னை பொறுத்தவரை, இந்த இருவித கேள்விகளுமே தவறானவை, மிகவும் துரதிருஷ்டவசமானவை.

கார்கரே சுட்டு கொல்லப்பட்டது பற்றி மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில், ஹேமந்த் கார்கரே மரணத்தில் சதித்திட்டம் இல்லை என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வந்துள்ளனர்.

கார்கரேவும், அவருடன் பலியான 2 அதிகாரிகள் மற்றும் 3 போலீசார் ஒரே குவாலிஸ் காரில் சென்றது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானது, முற்றிலும் தற்செயலானது.

சம்பவம் நடந்த நவம்பர் 26-ந் தேதி இரவு 9.45 மணிக்கு மும்பை தாதரில் (கிழக்கு) உள்ள தனது வீட்டுக்கு ஹேமந்த் கார்கரே வந்தார். சற்று நேரத்தில், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் தொண்ட்வால்கரிடம் இருந்து கார்கரேவுக்கு போனில் தகவல் வந்தது.

உடனே, கார்கரே, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் ஆகியோரைக் கொண்ட தனது படையுடன் `பலேரோ' ஜீப்பில் ரெயில் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால் வழியில், போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர். எனவே, கார்கரேவும், அவரது படையினரும் ஜீப்பில் இருந்து இறங்கி ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர்.


அங்கு சென்றவுடன், ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. ரகுவன்ஷியும், சில அதிகாரிகளும் கார்கரேவை சந்தித்தனர். ரெயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தி விட்டு, 2 தீவிரவாதிகள் அஞ்சுமன் லேன் வழியாக தப்பிச் சென்று விட்டதாக கூறினர். உடனே, கார்கரே, குண்டு துளைக்காத உடை மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு, தனது படையினருடன், தீவிரவாதிகள் தப்பிச்சென்ற திசையில் விரைந்தார்.

அவர்கள் நேராக காமா ஆஸ்பத்திரியின் பின்பக்க நுழைவாயிலை அடைந்தனர். ஆஸ்பத்திரிக்குள் துப்பாக்கி சூடு சத்தமும், கையெறி குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டது. இதனால் கார்கரேவும், அவரது படையினரும் எதிர் தாக்குதலுக்கு தயாராயினர்.

அந்த நேரத்தில், அசோக் காம்தே, விஜய் சலஸ்கர் ஆகிய போலீஸ் அதிகாரிகள் காமா ஆஸ்பத்திரியின் பின்பக்க நுழைவாயிலில் கார்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, கூடுதல் கமிஷனர் சதானந்த் ததேவின் ஒயர்லெஸ் ஆபரேட்டர் தெலேகர், குண்டு காயத்துடன் காமா ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். சண்டையில் சதானந்த் ததே காயம் அடைந்து இருப்பதாக கார்கரேவிடம் தெரிவித்தார். அப்போது, காமா ஆஸ்பத்திரியின் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடந்தது. திடீரென அமைதி நிலவியது. பிறகு, செயின்ட் சேவியர் கல்லூரி இருக்கும் திசையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.


உடனே, கார்கரே தனது படையினரை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு, போலீஸ் அதிகாரிகள் அசோக் காம்தே, சலஸ்கர் மற்றும் 4 போலீசாருடன் ஒரே குவாலிஸ் ஜீப்பில் செயின்ட் சேவியர் கல்லூரி நோக்கி விரைந்தார். ஒரு ஏ.டி.எம். மையத்தை கடந்து சென்றபோது, ரோட்டின் மறுபக்கத்தில் புதருக்குள் இருந்து 2 தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து, குவாலிஸ் காரில் இருந்த ஒரு போலீஸ்காரர் திருப்பிச் சுட்டார். இதில் ஒரு தீவிரவாதியின் கையில் காயம் ஏற்பட்டது. அவன்தான் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல். இந்த துப்பாக்கி சண்டையில் கார்கரே உள்பட 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீஸ்காரர் அருண் ஜாதவ் மட்டும் காயமின்றி உயிர் தப்பினார்.

உடனே, தீவிரவாதிகள் இருவரும் கார்கரே உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகளையும் காரில் இருந்து கீழே இழுத்து போட்டு விட்டு காரை கடத்திச் சென்றனர். பின்இருக்கையில் இருந்த போலீசார் பலியாகி விட்டதாக நினைத்துக்கொண்டு, அவர்களுடன் சேர்த்து காரை ஓட்டிச் சென்றனர். காயம் அடைந்த 3 போலீசாருக்கு அடியில் போலீஸ்காரர் அருண் ஜாதவ் இருந்ததால், அவர் தீவிரவாதிகளின் கண்ணில் படவில்லை.

`ப்ரீ பிரஸ் ஜர்னல் மார்க்' என்ற இடத்தில் குவாலிஸ் ஜீப்பை அனாதையாக விட்டு விட்டு, மற்றொரு காரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அதற்குள் காரில் இருந்த 3 போலீசார் இறந்து விட்டனர். தீவிரவாதிகள் நடு ரோட்டில் இழுத்துப் போட்ட கார்கரே உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகளும் இறந்து விட்டனர். போலீஸ்காரர் அருண் ஜாதவ் மட்டும் உயிர் தப்பி, நடந்த சம்பவங்கள் பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

மராட்டிய முதன்மை செயலாளரின் கார் டிரைவர் மாருதி மாதவராவ், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதையும், காரை கடத்திச் செல்வதையும், அருகில் இருந்து பார்த்துள்ளார். அவரும், போலீஸ்காரர் அருண் ஜாதவும், தீவிரவாதி அஜ்மலும் அளித்த தகவல்கள் மூலம் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளன. எனவே, போலீஸ் அதிகாரி கார்கரே மரணத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை.

இந்த நேரத்தில், கார்கரேவும், அவரது சகாக்களும் காட்டிய துணிச்சலுக்கு நாட்டு மக்களும், எம்.பி.க்களும் வீர வணக்கம் செலுத்த வேண்டும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குறிப்பாக பிள்ளைகளுக்கும் உதவ வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக நாட்டினர் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

No comments: