Sunday, December 14, 2008

ஈழத்தமிழர்களை காக்கும் உணர்வு தமிழகத்தில் பரவ வேண்டும்.- "வைகோ"


சென்னை, டிச.15-
ஈழத்தமிழர்களை காக்கும் உணர்வு தமிழகத்தில் பரவ வேண்டும் என்று வைகோ பேசினார்.

வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதி வழங்கும் பொதுக்கூட்டம் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சு.ஜீவன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சீமா பஷீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் ஒரு கோடியே 10 ஆயிரம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதியாக கொடுக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-
இங்கு கொடுத்த நிதி சாதாரணமானது அல்ல. ஆனால் இன்றைய அரசியல் அரங்கில் மிக சாதாரணமானது. 15 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை வாழ வைத்தவர்கள் தொண்டர்களும், மக்களும்தான். அவர்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு காசையும் கோடி பொன்னாக மதிக்கிறேன். தொண்டர்களின் வியர்வை துளியில் திரட்டப்பட்ட இந்த பணம் கோடி பொன்னையும் விட உயர்ந்தது.

நவம்பர் மாதம் 8-ந் தேதி வீர.இளவரசன் அகால மரணம் அடைந்தார். நாடாளுமன்ற தேர்தலுடன், திருமங்கலம் இடைத்தேர்தல் வரும் என்று கருதினோம். டெல்லி, சத்தீஸ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு வந்துள்ளது.
மங்களூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தைரியம் இல்லை.


இலங்கை ராணுவ துணை தளபதி பொன்சேகா தமிழக அரசியல் தலைவர்கள் பற்றிய பேச்சுக்கு அவரோ அல்லது ராஜபக்சேவோ வருத்தம் தெரிவித்தார்களா? அப்படி இருக்கும் போது இலங்கை அரசு வருத்தம் தெரிவித்ததாக கூறுவது நியாயம்தானா? இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அப்படி இருந்தும் என்ன திமிர் பொன்சேகாவுக்கு. தமிழக முதல்-அமைச்சரை விமர்சித்தவனை எப்படி மன்னிக்க முடியும்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து வைகோவுக்கும், பழ.நெடுமாறனுக்கும் வருமானம் போய்விடும் என்பதற்காக போரை நிறுத்த சொல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். பொதுவாழ்வு என்பது புனிதமான இடம். பக்தர்களுக்கு கோவில் சொத்து எப்படியோ, அது போலவேதான் கட்சி சொத்து.
பழ.நெடுமாறன் ஒரு துறவி போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்னுடைய பெருமை, கவசம், பாதுகாப்பு எல்லாமே என்னுடைய நேர்மைதான். சொந்த நாட்டிலே உரிமை கேட்டு போராடும் விடுதலைப்புலிகளிடம் இருந்து காசு வாங்குவது என்று கூறுவது ஈனத்தனத்தை விட கேவலமானது. போர் பூமியில் உயிரை பணயம் வைத்து செல்லும் அவர்களிடம் பணம் எதிர்பார்க்கிறோம் என்று சொல்பவர்களுக்கு மன்னிப்புகூட கிடைக்காது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எண்ணம் தற்போது தமிழ்நாட்டை நோக்கி உள்ளது. இலங்கை தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகளாம், தாய்த் தமிழ்நாட்டு தமிழர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் கதி? நாம்தானே. நம் சொந்த சகோதரர்கள் சாகிறார்களே, சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ துடிப்பது தவறா? சுதந்திர தமிழ் ஈழத்தை நாம் ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களை காக்கும் உணர்வு தமிழ்நாட்டில் பரவட்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.

வைகோ பேசிக் கொண்டிருந்த போது அவரின் தலைக்கு மேலே இருந்த மின்விளக்கில் திடீரென தீப்பொறிகள் பறந்து கீழே விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த விளக்குக்கு சென்ற மின்சாரம் நிறுத்தப்பட்டு வைகோ தொடர்ந்து பேசினார்.
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் மாசிலாமணி, துணை பொது செயலாளர் மல்லை சி.சத்யா, நாசரேத் துரை, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், பாலவாக்கம் சோமு, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வக்கீல் தேவதாஸ், மகளிர் அணி அமைப்பாளர் விஜயகுமாரி, எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் ஆகியோர் கூட்டத்தில் பேசினார்கள்.

No comments: