Saturday, December 27, 2008

சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில், 10-வது முறையாக கருணாநிதி மீண்டும் தலைவராக தேர்வு!.


சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், 10-வது முறையாக கட்சியின் தலைவராக முதல்- அமைச்சர் கருணாநிதி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். அமைச்சர் அன்பழகன் கட்சியின் பொதுச்செயலாளராகவும், அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொருளாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

சென்னை, டிச.28-

தி.மு.க.வின் 13-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு கூடியது.

கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி காலை 10.15 மணிக்கு கலைஞர் அரங்கத்துக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வை கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா நடத்தினார்.
கட்சியின் தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. கருணாநிதியின் பெயரை அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் உள்பட 200 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர்.

தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் கருணாநிதி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று ஜி.எம்.ஷா அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அரங்கில் இருந்தவர்களும், அண்ணா அறிவாலய வளாகத்தில் கூடி நின்ற தி.மு.க.வினரும் விண் அதிர கைதட்டி, வாழ்த்தொலி முழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெயருக்கான வேட்புமனுவை 171 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் தாக்கல் செய்து இருந்தனர்.

வேறு யாரும் பொதுச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்யாததால், பேராசிரியர் அன்பழகன் தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதே போல், தி.மு.க. பொருளாளர் பதவிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் 38 மனுக்களை 174 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் தாக்கல் செய்து இருந்தனர். வேறு யாரும் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

எனவே, அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொருளாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று தேர்தலை நடத்திய ஜி.எம்.ஷா அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து அரங்கில் கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களும், அண்ணா அறிவாலயத்தில் குவிந்து இருந்த தி.மு.க. தொண்டர்களும் வாழ்த்தொலி முழங்க கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்பட்ட பின், தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி, பொது செயலாளர் அமைச்சர் அன்பழகன், பொருளாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.

கருணாநிதி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

பின்னர் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

கழக சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றுக்கு பொதுக்குழு ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதனை, டி.கே.இளங்கோவன் பொதுக்குழு முன் வைப்பார் என்று அறிவித்து அவற்றை நிறைவேற்றித்தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்சியின் தணிக்கைக்குழுவுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

தணிக்கைக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, வி.காசிநாதன், மதுரை பே.குழந்தைவேலு, எல்.பலராமன் (முன்னாள் வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்), நெல்லை சுப.சீத்தாராமன் ஆகிய நால்வர் மட்டும் மனு தாக்கல் செய்து உள்ளனர். எனவே, அவர்கள் நால்வரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி, உரிமையின்படி, கட்சியின் தலைமைக்கழக முதன்மைச் செயலாளராக ஆற்காடு வீராசாமி, கட்சியின் துணைப்பொது செயலாளர்களாக துரைமுருகன், சற்குணபாண்டியன், பரிதி இளம்வழுதி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இதைத்தொடர்ந்து, பொதுக்குழு தீர்மானத்தை கட்சியின் புதிய பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள மு.க.ஸ்டாலின் படித்தார். தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆமோதித்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் முன் வரிசையில் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கவிஞர் கனிமொழி எம்.பி., கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். டி.ஆர்.பாலு, வெங்கடபதி, ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட மத்திய மந்திரிகளும், மாநில அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, நடிகர் பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுக் கூட்டம் பகல் 12.35 மணிக்கு முடிந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதி 1967-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இப்போது 10-வது முறையாக அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் அன்பழகன் 8-வது முறையாக பொதுச் செயலாளராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரையில் தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் கட்சியின் பொருளாளராக பணியாற்றிய ஆற்காடு வீராசாமி, கட்சியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தி.மு.க. தலைவராக பேரறிஞர் அண்ணா தலைவராக இருந்த போது தி.மு.க. பொருளாளராக கருணாநிதி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எம்.ஜி.ஆர். பொருளாளராக இருந்தார். அவரை தொடர்ந்து சாதிக் பாட்சா அந்த பதவியை வகித்தார். அவரது மறைவிக்கு பின் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அந்த பதவியை வகித்துவந்தார்.

கட்சியின் புதிய பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள மு.க.ஸ்டாலின் மாணவ பருவத்திலே கட்சி பணியில் ஆர்வம் காட்டினார். அண்ணா பிறந்த நாள் விழாக்களிலும், பல்வேறு விழாக்களிலும் நாடகங்கள் மூலம் கட்சி கொள்கைகளை பரப்பினார்.

1976-ம் ஆண்டு மிசா கைதியாகி சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார். 1980-ம் ஆண்டு முதல் இளைஞர் அணி செயலாளர் பதவி ஏற்று அந்த பொறுப்பை திறம்பட பணியாற்றி அனைவரின் பாராட்டை பெற்றார்.

1989-ம் ஆண்டு ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் மீண்டும் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையையும் பெற்றார்.

மீண்டும் 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதே சமயம் சென்னை மாநகராட்சி மேயராக 2-வது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், 2003-ம் ஆண்டு தி.மு.க. துணை பொதுச் செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டினார். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது; மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் மிக முக்கிய பொறுப்புகள் தேடிவருவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக சூசகமாக தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தி.மு.க. பொதுக்குழுவில் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

No comments: