Sunday, December 28, 2008

"இந்தியாவை எதிர்த்து போரிட 500 மனித வெடிகுண்டுகளுடன் 35 ஆயிரம் தீவிரவாதிகள் தயார்!." - பாகிஸ்தான் தலிபான் தளபதி கொக்கரிப்பு!.


பெஷாவர், டிச.29-

பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த 500 மனித வெடிகுண்டுகள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் 35 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தளபதி அறிவித்துள்ளான்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய நேரடி யுத்தத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அழித்து ஒழிக்குமாறு இந்தியா மற்றும் உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அந்த நாடு ஏற்க மறுக்கிறது. அதே நேரத்தில், `பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லை' என்று கூறி வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ஏராளமான தீவிரவாத அமைப்புகள் அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன. பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்திய ராணுவத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் அமைப்பின் ஒரு பிரிவு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் என்ற இடத்தை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பின் `முல்லா நஜீர் குழு (வாலி முகமது)' என்று பிரிவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக, பெஷாவரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தளபதியும் முல்லா நஜீர் குழுவின் செய்தி தொடர்பாளருமான தெசில் கான் என்பவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள தற்போதைய பதற்றத்தை தொடர்ந்து எங்களுடைய உண்மையான இலக்கை (இந்தியா) நாங்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டோம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நாங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்.

பாகிஸ்தான் அரசின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஆனால், நாட்டின் இறையாண்மைக்கு ஊறு ஏற்படும்போது தங்களுடைய உயிரையும் கொடுக்க தலிபான்கள் தயங்க மாட்டார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவித உக்கிரமான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியாவை எச்சரிக்கிறோம். இல்லாவிட்டால், தற்கொலைப்படை தாக்குதல்கள் மூலமாக இந்தியாவையே அழித்து விடுவோம்.

இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவோம். பாகிஸ்தானின் கிழக்கு எல்லையை (இந்திய எல்லை) காப்பதற்காக 500 மனித வெடிகுண்டுகள் தயாராக உள்ளனர். மேலும், அதி நவீன ஆயுதங்களுடன் 35 ஆயிரம் தலிபான்களும் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போரிடுவார்கள்.

இவ்வாறு தெசில் கான் தெரிவித்து உள்ளான்.

முன்னதாக, `பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் போரிடுவார்கள்' என்று தலிபான் அமைப்பின் மற்றொரு பிரிவின் தலைவரான பைதுல்லா மசூத் என்பவன் கடந்த புதன்கிழமை அன்று தெரிவித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் வெளியிட்ட அறிக்கையில், `பாகிஸ்தான் எங்களுக்கு நெருக்கமானது. அங்கு வாழும் மக்களும் நாங்களும் அதன் குடிமக்களே. எனவே, போர் முனையில் எங்களுடைய இயக்கத்தினரும் முன்னணியில் நின்று போரிடுவார்கள்' என்று அறிவித்து இருந்தான்.

No comments: