Tuesday, December 23, 2008

"வீண் பீதியை பாகிஸ்தான் கிளப்புகிறது".!. -"போரை யாரும் விரும்பவில்லை" -மன்மோகன்சிங் பேட்டி!.




புதுடெல்லி, டிச.24-

பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே போர் பீதியை பாகிஸ்தான் கிளப்புவதாக இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. போரை யாரும் விரும்பவில்லை என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

நேற்று மாலை, பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் வெளியே வந்த பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள், மும்பை தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நிர்பந்தத்தில் இருந்து திசை திருப்பவே பாகிஸ்தான் போர் பீதியை கிளப்புவதாக கண்டனம் தெரிவித்தனர்.
யாரும் போரை விரும்பவில்லை என்றும், தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் உடனடியாக அழிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து உலக நாடுகள் பாகிஸ்தானை நிர்பந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார்.

விமானப்படை விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டதன் மூலம், பாகிஸ்தானில் நேற்று முன்தினம் போர் பீதி கிளம்பியது. அதற்கு அடுத்த நாள், இந்தியாவின் தரப்பில் வெளியான இந்த கண்டன அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மன்மோகன்சிங் தனது பேட்டியின்போது, "தீவிரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் அர்த்தம் என்ன என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் செயல்பட வேண்டும்'' என்றும் வற்புறுத்தினார்.

வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி கூறும்போது, "மும்பையில் வஞ்சகமான கோரத்தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வீண் பீதியை கிளப்ப வேண்டாம் என்று பாகிஸ்தானில் உள்ள நண்பர்களை கேட்டுக் கொள்வதாக'' குறிப்பிட்டார்.

"தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தீவிரவாதத்தை அனுமதிக்கமாட்டோம் என்று, கடந்த 2004 ஜனவரியில் முஷரப்பும், 2008 செப்டம்பரில் தற்போதைய அதிபர் சர்தாரியும் அளித்த உறுதிமொழிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

120-க்கு மேற்பட்ட நாடுகளில் பணியாற்றும் இந்திய தூதர்களின் 3 நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மன்மோகன்சிங், "பொருளாதார வல்லரசாக இந்தியா மாறுவதை தடுக்கவே மும்பை தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இத்தகைய தாக்குதல் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது'' என்று உறுதியுடன் தெரிவித்தார்.


"அண்டை நாடுகளுடன் இந்தியா அமைதி - ஸ்திரத்தன்மையையே விரும்புகிறது. ஆனால், தீவிரவாதிகளை எந்த அரசையும் சாராதவர்கள் என்று கூறினாலும், அவர்களுக்கு அரசு சார்பில் ஆதரவும் ஊக்கமும் அளிப்பதாக'', பாகிஸ்தான் மீது அவர் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

"இந்தியாவை எதிர்நோக்கியுள்ள முக்கியமான சவால்கள், வறுமை, நோய் மற்றும் அறியாமையை ஒழிப்பதே ஆகும். இந்த இலக்கை அடைவதற்கு இடைïறாக உள்ள தடைகளை அகற்றவும், வருங்காலத்தில் இந்தியா பொருளாதார மற்றும் அறிவுசார் வல்லரசாக உருவாகவும், நமது ராஜதந்திர நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, நீர் வள நிர்வாகத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றும் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார்.

No comments: