
மதுரை, டிச.23-
அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியுடன் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக லதா அதியமான் போட்டியிடுகிறார். அவர் நேற்று தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்தே ஊர்வலம் தொடங்கும் திருமங்கலம் சந்தைப்பேட்டை முன்பு தி.மு.க.வினர் திரள தொடங்கினர். காலை 10 மணியளவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, வேட்பாளர் லதா அதியமான் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை முழங்கி அவர்களை வரவேற்றனர்.
இதன் பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோருடன் லதா அதியமான் திறந்த ஜீப்பில் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலம் உசிலம்பட்டி ரோடு வழியாக தாலுகா அலுவலகத்தை நோக்கி கொம்பு வாத்தியம் முழங்க சென்றது.
ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தமிழரசி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரும், காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து காலை 11.40 மணிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோருடன் வேட்பாளர் லதா அதியமான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தாலுகா அலுவலகத்திற்குள் சென்றார். 12.05 மணிக்கு உதவி தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் வேட்பாளர் லதா அதியமான் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதரன், வேட்புமனு தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment