Monday, December 29, 2008

மின்வெட்டை ரத்து செய்ய தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு நிபந்தனை : ஆற்காடு வீராசாமி அறிவிப்பு


சென்னை :
மின்வெட்டை ரத்து செய்ய ‌தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் தொழிலதிபர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொழிலதிபர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிபந்தனைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-

உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை 30% மாக குறைப்பது, குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை 15%மாக குறைப்பது. இது முதல் நிபந்தனை. இரண்டாவது நிபந்தனை, வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளித்தால், அந்த தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை ரத்து செய்ய அரசு தயாராக உள்ளது .

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிலதிபர்களும் அரசின் இரண்டாவது நிபந்தனைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாளை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசு இருக்கிறேன்.

முதல்வரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 2 நாள் விடுமுறை விடும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மின்வெட்டை ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்படும். தற்போது மத்திய அரசிடம் கேட்ட மின்சாரம் தமிழகத்துக்கு கிடைத்து வருகிறது.

ஜனவரி 15-ந் தேதிக்குள் மேலும் 500 மெகாவாட் மின்சாரம் தர மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதனால் மின்வெட்டு படிப்படியாக குறையும்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

No comments: