Friday, December 26, 2008

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது தொடர்ந்து 10வது முறை கலைஞர் கருணாநிதி தலைவர் ஆகிறார்


சென்னை, டிச. 27:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. இதில் கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தல் நடக்கிறது.

முதல்வர் கருணாநிதி, தொடர்ந்து 10வது முறையாக திமுக தலைவராகிறார்.
திமுகவின் 13வது கட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்தன. கிளை, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்காக கட்சியின் பொதுக்குழு இன்று கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு நடக்கும் பொதுக்குழுவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற் கின்றனர்.
கூட்டம் தொடங்கியதும் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். அதைத் தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தலைவர் பதவிக்கு முதல்வர் கருணாநிதி போட்டியிடுவதற்காக ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தலா ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல பொதுச் செயலாளர் பதவிக்காக நிதியமைச்சர் அன்பழகனுக்கும், பொருளாளர் பதவிக்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தனித்தனியாக பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு இந்த மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல்வர் கருணாநிதி, தொடர்ந்து 9 முறை திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போது 10வது முறையாக அவர் தலைவராகிறார். அமைச்சர் அன்பழகன் 8வது முறையாக பொதுச் செயலாளராகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் அமைச்சர் ஸ்டாலின், பொருளாளர் ஆகிறார்.

No comments: