Saturday, December 27, 2008

"போர் வேண்டாம், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்கலாம்" - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி!.




இஸ்லாமாபாத், டிச.28-

அமெரிக்கா, சீனாவின் நிர்பந்தத்தை அடுத்து, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பணிந்து வருகிறார். `வேண்டாம் போர்', அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று அவர் இறங்கி வந்திருக்கிறார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க மறுத்து வந்த பாகிஸ்தான், இந்தியா படையெடுக்கப்பபோவதாக வீண் போர் பீதியையும் கிளப்பி வந்தது. எல்லையில் படைகளை குவித்து, போர் ஒத்திகையிலும் இறங்கியது.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்த நிலையில், பதற்றத்தை தணிக்கும் விதத்தில் அமெரிக்கா, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கின. தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் பாகிஸ்தானுக்கு நிர்பந்தம் கொடுத்தன.


3 நாடுகளின் நிர்பந்தம் வந்த அடுத்த நாளான நேற்றே, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் பேச்சில் `சுருதி' குறைந்துவிட்டது. "போரைப்பற்றி நாங்கள் பேசவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்'' என்று, அவருடைய மனைவி பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆற்றிய உரையில் சர்தாரி குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை நாங்கள் நிச்சயம் அழிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்று உறுதியுடன் தெரிவித்த அதே நேரத்தில், "அதுபற்றி இந்தியா எங்களுக்கு சர்வாதிகாரமாக கட்டளையிட முடியாது'' என்றும், அவர் விட்டுக்கொடுக்காமல் பேசினார். தனது உரையில் சர்தாரி மேலும் கூறியதாவது-


"தீவிரவாதம் என்ற புற்றுநோயினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதை முற்றிலும் எங்களால் குணமாக்க முடியும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். இந்தியா-பாகிஸ்தான் பிராந்தியத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு போரினால் தீர்வு காண முடியாது. போரினால் இந்த பிராந்தியம் முழுமையாக பாதிக்கப்படும். பேச்சுவார்த்தைதான் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான எங்களது மிகப்பெரிய ஆயுதம், கருவி.

உலகின் பழைமையான ஜனநாயக நாட்டிற்கும் (அமெரிக்கா) உலகின் பெரிய ஜனநாயக நாட்டிற்கும் (இந்தியா) நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம், நாங்கள் சொல்வதை கேளுங்கள். எங்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. ஏராளமான எங்கள் மக்களை இழந்து இருக்கிறோம். போரைப்பற்றி நாங்கள் பேசவில்லை. பழிவாங்குவது பற்றியும் பேசவில்லை.


இந்த பிராந்தியத்தில் (இந்தியா) உள்ள சிலர், ஒருவேளை பாகிஸ்தானின் மனோதிடத்தை, தைரியத்தை பரிசோதிக்க விரும்பினால், அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், பலமுறை எங்கள் மனோதிடம் பரிசோதிக்கப்பட்டுவிட்டது. எனவே, தயவு செய்து மீண்டும் அதை பரீட்சித்து பார்க்க வேண்டாம் என்பதுதான். எங்களிடம் சில பலவீனங்கள் இருப்பது உண்மைதான்.

அதை நாங்களே சரிசெய்துவிடுவோம். ஆனால், உங்கள் (இந்தியா) கட்டளைக்கு கீழ்ப்படிந்து அல்ல. தீவிரவாதிகளை ஒழிக்க நாங்களே விரும்பி நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் (நிர்பந்தம் அளிக்கும் நட்பு நாடுகள்) விரும்புவதால் அல்ல. அதற்கான சரியான நேரத்தை நாங்கள் தேர்ந்து எடுப்போம். ஒவ்வொரு துயர நிகழ்வுமே, நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்புதான். இன்றைய தினம் உலகின் கவனம் பாகிஸ்தான் மீது திரும்பி உள்ளது. எங்களுக்கு அதிகமான உதவி தேவைப்படுகிறது''.

இவ்வாறு சர்தாரி கூறினார்.

No comments: