Thursday, December 25, 2008

இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி ஒத்திகை!.பொக்ரான் பகுதியில் நடந்தது!.- பாகிஸ்தானுடன் யுத்தம்?



புதுடெல்லி, டிச.26-

பாகிஸ்தானுடன் போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் பொக்ரான் பகுதிகளில் குறி தவறாமல் குண்டுகளை வீசி இந்திய போர் விமானங்கள் நேற்று ஒத்திகை பார்த்தன. அதே நேரத்தில் குண்டு வீச்சில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கான ஒத்திகையை ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் பாகிஸ்தான் விமானங்கள் மேற்கொண்டன.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய நேரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அது தொடர்பாக ஆதாரங்களை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மலை கூட, `தங்கள் நாட்டைச் சேர்ந்தவன் அல்ல' என்று பொய் சொல்கிறது.

அதே நேரத்தில், இந்தியா தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், `பாகிஸ்தான் தான் தேவையில்லாமல் போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள தீவிரவாத முகாம்களை முதலில் அந்த நாட்டு அரசு அழிக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார்.


இருநாட்டு தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகளின் எச்சரிக்கை பேட்டிகளுக்கு இடையே போருக்கான ஆயத்தங்களில் பாகிஸ்தான் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தையொட்டி இந்திய எல்லைக்கு அருகே போர் விமானங்களை முழுவீச்சில் தயார் படுத்தி உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தினால் அதை எதிர் கொள்வது எப்படி என்பதற்கான ஒத்திகையை ராவல்பிண்டி, இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் நடத்தியது. விளக்குகளை அணைப்பது, எச்சரிக்கை ஒலியை கண்டறிவது உட்பட போர்க்கால செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. குறிப்பாக ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இந்திய விமானங்களும் நேற்று போர் ஒத்திகையில் ஈடுபட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்தான் தீவிரவாதிகள் இருப்பதாக கருதப்படுவதால், அங்கு குறி தவறாமல் குண்டுகளை வீச பயிற்சி எடுத்துக்கொண்டன. இதற்காக ராஜஸ்தான் பாலைவன பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் போலி குண்டுகளை வீசின.

இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், "பொக்ரான், ஜாம்நகர், ஜோத்பூர், குவாலியர், ஹால்வாரா உள்ளிட்ட இடங்களில் போர் விமானம் மூலமாக பூமியில் குறிபார்த்து குண்டுகளை வீசும் பயிற்சி நடந்தது'' என்றனர்.

எனினும், இது வழக்கமாக நடைபெறும் போர் பயிற்சி என்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்தகைய பயிற்சியை விமானப்படை மேற்கொண்டு வருவதாகவும் விமானப்படை செய்தி தொடர்பாளர் மகேஷ் உபாசானி தெரிவித்தார்.

இதற்கிடையே, எல்லைப்பகுதியில் போர் விமானங்களை குவிக்கும் தகவலையும் இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறுகையில், "வானத்திலேயே விமானங்களுக்கு இடையே எரிபொருள் நிரப்பும் வசதி நம்மிடம் உள்ளது. மேலும், எவ்வளவு தொலைவுக்கு வேண்டுமானாலும் சென்று தாக்கிவிட்டு மீண்டும் திரும்பும் சக்தி நம்முடைய விமானங்களுக்கு உண்டு. எனவே, எல்லையில் விமானங்களை குவிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்றனர்.

வானத்திலேயே விமானங்களுக்கு இடையே எரிபொருள் நிரப்பும் வசதி பாகிஸ்தானிடம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எல்லைப்பாதுகாப்பு படையும் முழு ஆயத்தமாக இருப்பதாகவும் எத்தகைய நிலைமையையும் எதிர் கொள்ள முடியும் என்றும் எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குனர் ஜெனரல் யு.கே.பன்சால் தெரிவித்தார்.

No comments: