Thursday, December 18, 2008

தமிழகத்தில் ரூ.900 கோடியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம்?.!.


சென்னை, டிச.19-

தமிழகத்தில் நியூட்ரான் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பது தொடர்பாக, முதல்-அமைச்சர் கருணாநிதியுடன், அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் நேற்று சந்தித்து பேசினார். நீலகிரி அருகே அதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை, இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் நேற்று காலை சந்தித்தார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றியும், அணுசக்தி தொடர்பான இதர விஷயங்களையும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அனில் ககோட்கர் எடுத்துரைத்தார். அதன்பிறகு, தமிழகத்தில் நிட்ரினோ அறிவியல் கூடத்தை அமைப்பது பற்றி விவாதித்தார்.
அப்போது, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தமிழக மின்வாரியத் தலைவர் சி.பி.சிங், எரிசக்தித்துறை செயலாளர் ஸ்மிதா நாகராஜ், இந்திய அணுசக்தித் துறை இணை செயலாளர் பி.முகர்ஜி, இந்திய கணித அறிவியல் பேராசிரியர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், நாபா மண்டல், எம்.வி.என். மூர்த்தி, ஜி.ராஜசேகரன் மற்றும் தொழில்ட்ப ஒருங்கிணைப்பாளர் டேனியல் செல்லப்பா ஆகியோர் இருந்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பிறகு வெளியே வந்த அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர், தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை, தமிழகத்தில் நியூட்ரினோ அறிவியல் கூடம் அமைக்கும் விஷயம் தொடர்பாக சந்தித்து பேசினேன். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது உண்மையே. கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு பாதுகாப்பு தருவது போன்ற விஷயங்கள் பற்றி நான் பேசவில்லை. மும்பையில் தீவிரவாத சம்பவம் நடந்ததற்குப் பிறகு, கல்பாக்கத்தில் பாதுகாப்பு மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம்.


கூடங்குளத்தில் முதல் ஆலையில் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஆண்டின் முதல்பாதியில் மின்உற்பத்தி தொடங்கிவிடும். மற்றொரு ஆலையில் மின்உற்பத்தி, 2009-ன் இறுதியில் தொடங்கிவிடும்.

இதுதவிர, கனநீர் உலைகள் அமைக்கும் பணிகளும், அதிவேக ஈணுலைகள் அமைக்கும் பணிகளும், யுரேனியம் தொடர்பான திட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

இவ்வாறு அனில் ககோட்கர் கூறினார்.
முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான, அனில் ககோட்கரின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது பற்றி ஒரு உயர் அதிகாரி தெரிவித்ததாவது:-

அணுக்கருவில் உள்ள மிகச்சிறிய துகள்தான் நியூட்ரான். இது அணுசக்தி திட்டங்களுக்கு, குறிப்பாக, அணுஉலை திட்டங்களுக்கும் மிகவும் உபயோகரமானதாகும். யுரேனியம் போன்றவற்றை பிளப்பதற்கு இவை உதவும். நியூட்ரான் ஆராய்ச்சி மூலம் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் பயனுள்ள முடிவுகளை பெறமுடியும்.

உதாரணத்துக்கு, நோயாளியின் உடலை `ஸ்கேன்' செய்தால் மிக துல்லியமாக காட்ட இவை உதவும். இதுபோல் பல பயன்பாடுகள் இதில் உள்ளன. உலகில் நிட்ரான் ஆராய்ச்சி மிகவும் புகழ் பெற்று வருகிறது. உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இதுபோன்ற ஆராய்ச்சிக்கூடத்தை இந்திய அரசு தற்போது தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இதற்காக மத்திய அணுசக்தித் துறை ரூ.900 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம், தமிழகத்துக்கு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

``இந்தியாவில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் தொடங்கினால், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் கூட இந்தியாவுக்கே திரும்ப ஆசைப்படுவார்கள். மேலும், இங்குள்ள கல்லூரி மாணவர்களும், நியூட்ரினோ ஆராய்ச்சியில் பங்கெடுத்து, சிறந்த வல்லுனர்களாக உருவாக முடியும்.

``இதற்காக, தமிழக அரசிடம் நிலம் கேட்கப்பட்டிருந்தது. இதை கனிவுடன் பரிசீலித்த தமிழக அரசு, நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி அருகே அதற்காக, இடம் ஒதுக்கித் தரமுடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு திட்ட மதிப்பீட்டையும் தமிழக அரசு தயாரித்துள்ளது. இந்த ஆராய்ச்சிக் கூடம் இங்கு அமைந்தால், தமிழகத்துக்கு எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நலன் பயக்கும் திட்டமாக இருக்கும்''.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கு உள்ளூரில் சில பொது நல அமைப்புகளும் மற்றும் வனத்துறையினரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நல்ல முடிவு ஏற்படுத்தி தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ககோட்கர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

No comments: