Thursday, December 11, 2008

திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்







திருவண்ணாமலை, டிச.12-
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளான நேற்று மாலை, மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந் தேதி தேரோட்டம் நடந்தது.
தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றுதலும், மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுதலும் நேற்று நடந்தது. இதற்காக நேற்று அதிகாலை 1 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 4 மணிக்கு 5 அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டு அதில் இருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் அகண்ட தீபம் ஏற்பட்டது.

அதே நேரம் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் தயாராக நெய் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திலும், வெளியேயும் கூடியிருந்த பக்தர்கள் `அண்ணாமலைக்கு அரோகரா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
கோவிலுக்கு வெளியே பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வணங்கினார்கள். மலை உச்சியில் தீப ஜோதி எரிந்தவுடன் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், கடைகளிலும் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வணங்கினார்கள்.

இந்த தீப விழாவுக்கு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இந்த விழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு தீபத்தை தரிசனம் செய்தனர்.

No comments: