Sunday, December 14, 2008

உலக அழகி போட்டி நடுவர்கள் மீது இந்திய அழகி புகார்


ஜோஹன்ஸ்பர்க், டிச.15-
தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் இருந்த நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டு தவறான முடிவு எடுத்து விட்டதாக இரண் டாவது இடம் பிடித்த இந்திய அழகி பார்வதி ஓமன குட்டன் புகார் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அழகியை தேர்வு செய்து உலக அழகி பட்டம் அளிப்பது வழக்கம். உலக அழகி என்ற உடனேயே அனைவருடைய மனதையும் இனிக்கச் செய்வது ஐஸ்வர்யா ராய் என்ற பெயர்தான். 1966 ஆண்டுக்கு (ரீடா பரியா) நீண்ட காலம் கழித்து 1994-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
அவருக்கு பிறகு, டயானா ஹைடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோர் அடுத்தடுத்து உலக அழகிகளாக பட்டம் வென்றனர். தற்போது, தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் இந்திய அழகி பார்வதி உலக அழகி பட்டம் வென்று இந்திய உலக அழகிகளின் பட்டியலில் ஆறாவதாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஷிய நாட்டு அழகி சென்யா சுகினோவா `உலக அழகி - 2008' பட்டத்தை வென்றார். பட்டாம் பூச்சிகளைப் போன்று 107 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் அணிவகுத்து நின்ற மேடையில், இந்திய அழகி பார்வதி ஓமன குட்டனுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. இதனால் பார்வதி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
சுற்றின்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, `நீ உறங்கும்போது காண்பது கனவு அல்ல. உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு' என்ற அப்துல் கலாமின் அறிவுரையை பதிலாக கூறி நடுவர்களை பார்வதி ஆச்சரியப்படுத்தினார். ஆனாலும், அவருக்கு பட்டம் கிடைக்கவில்லை.

எனவே நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக பார்வதி புகார் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து இந்தியா விஷன் என்ற தொலைக்காட்சிக்கு பார்வதி நேற்று பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர், "மேடை அணிவகுப்பிலும், கேள்வி சுற்றிலும் மற்றவர்களை விட நான் சிறப்பாக செய்தேன். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே இதை அறிவார்கள். என்னை பொறுத் தவரை நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவே கருதுகிறேன். நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆங்கில இலக்கியம் படித்தவள் என்பதால் கேள்வி சுற்றில் சிறப்பாக பதிலளித்தேன்'' என்றார்.
2-வது இடத்தை பெற்ற போதிலும் பார்வதிக்கு பாராட்டுகள் குவிகின்றன. உலக அழகி போட்டிக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ரசிகர்கள் புகழ் மாலை சூட வருகின்றனர். `வாழ்த்துகள் பார்வதி. இந்தியாவின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்' என்று ஒருவரும், `பார்வதியால் இந்தியா பெருமிதம் அடைகிறது' என்று ஒருவரும் செய்தி அனுப்பி உள்ளனர்.
கேரளாவில் இருந்து ஒரு ரசிகர், `பார்வதி, உனக்கு ஆயிரம் பூச்செண்டுகளுடன் அனைத்து வாழ்த்துகள்' என மலையாளத்தில் செய்தி அனுப்பி இருக்கிறார். மாளவிகா என்ற பெண் ரசிகை, `உலக அழகி போட்டியில் நமது நாடு முத்திரை பதித்தது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பார்வதி, உனது வருகைக்காக காத்திருக்கிறேன்` என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் பார்வதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

No comments: