Saturday, December 27, 2008

இந்திய போர்க்கப்பல்கள் அரபிக்கடல் நோக்கி விரைவு.!. - போர்?.








விசாகப்பட்டினம், டிச.28-

போர் பதற்றம் ஏற்பட்டு இருப்பதால், இந்திய போர்க்கப்பல்கள் அரபிக்கடல் பகுதிக்கு விரைந்து உள்ளன.

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையில் குவித்து வருகிறது. பதுங்கு குழிகளையும் அமைத்து வருகிறார்கள். ஜெய்சல்மார், பார்மர், கங்காநகர், புஜ், ரஜோரி பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளன.

பாகிஸ்தானின் 9 போர்க்கப்பல்களும் இந்திய கடல் எல்லைக்கு அருகில் அணிவகுத்து நிற்கின்றன. தன்னிடம் உள்ள நீர்மூழ்கி கப்பல்களையும் பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்து இருக்கிறது.

இதேபோல் இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் படைகளை நிறுத்தி உள்ளது. இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்து இருந்த `கெடு' முடிந்து விட்டதால் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இதனால் இந்தியாவின் கிழக்கு கடற்கடை பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த `ஐ.என்.எஸ்.ஜலஷ்வா', `ஐ.என்.எஸ்.ரன்வீர்' உள்ளிட்ட மிகவும் சக்தி வாய்ந்த 6 போர்க்கப்பல்கள் அரபிக்கடலுக்கு, அதாவது இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிக்கு விரைந்து உள்ளன. ஆனால் இதை கடற்படை பெரிதுபடுத்த விரும்பவில்லை.


இதுபற்றி இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்; தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கும், நவீன போர்க்கப்பல்கள் மேற்கு கடற்கரை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், வழக்கமான பயிற்சிக்காக அவை சென்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. கிழக்கு கடற்கரை பகுதியில் கடற்படை கப்பல்களும், கடலோர பாதுகாப்பு படை கப்பல்களும் `உஷார்' நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

No comments: