Sunday, December 21, 2008

``காங்கிரஸ் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை'' - கே.வி.தங்கபாலு பேட்டி!.



சென்னை, டிச.22-

காங்கிரஸ் கட்சி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என்று கே.வி.தங்கபாலு கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிலர் நேற்று முன்தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அங்கு நின்ற காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கு அடி-உதை விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். அப்போது ஓவியர் நலவாரிய உறுப்பினர் ஐஸ் ஹவுஸ் தியாகு தலைமையில் தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு, ``நமது கட்சியினரை செருப்பால் தாக்கியுள்ளனர். நமக்கு பாதுகாப்பே இல்லை. ஆயுதம் ஏந்த எங்களை அனுமதியுங்கள்'' என்று கோஷமிட்டனர். மேலும், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய கே.வி.தங்கபாலு, ``உங்களது உணர்வுகள் புரிகிறது. நடந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியிடம் தெரிவித்துவிட்டோம். எந்த நேரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது கண்டிப்பாக எடுக்கப்படும்'' என்றார்.

பின்னர், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ஆரூண் எம்.பி., எம்.எல்.ஏக்கள் காயத்ரி தேவி, போளூர் வரதன், மகிளா காங்கிரஸ் தவைவர் சாய்லட்சுமி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சிரஞ்சீவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். 2004-ம் ஆண்டு தி.மு.க.வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, அப்போது திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்பட்டார். கூட்டணி கட்சியை மதிக்கின்ற கட்சி என்பதால் இந்தமுறையும் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்போம்.

இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு சித்தன் எம்.பி. தலைமை வகிப்பார். கூட்டணி தர்மம் அடிப்படையில் எங்கள் கட்சியினர் தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவார்கள்.


சத்தியமூர்த்தி பவனுக்குள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் புகுந்து கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு கட்சி அலுவலகத்திற்குள் இன்னொரு கட்சியினர் வருவது நல்ல பண்பு அல்ல. இந்த சம்பவத்தால் காங்கிரஸ் கட்சியினர் தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த எந்த கட்சியினர் விரும்பினாலும், தேதி சொல்லிவிட்டு வாருங்கள். நாங்களும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம். இப்படி பேடித்தனமான தாக்குதல் நல்லதல்ல. காங்கிரஸ் கட்சியினர் யாரையும் தாக்க மாட்டார்கள். காந்திய வழியில் வந்தவர்கள். எதையும் அறப்போராட்டம் மூலமே சாதிக்க விரும்புகிறோம்.


திருமாவளவனுக்கு காங்கிரஸ் கட்சி பற்றி பேச அருகதை இல்லை. தி.மு.க. உடனான காங்கிரஸ் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. இந்த கூட்டணியில் புதிதாக வந்தவர்கள் எங்களை பற்றி பேசக்கூடாது. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகளை வைப்பதா? வேண்டாமா? என்பது முதல்-அமைச்சர் கருணாநிதியின் பொறுப்பு.

காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள் மீது, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி பலகீனமான கட்சி அல்ல. வெள்ளையனையே வீட்டிற்கு அனுப்பிய கட்சி. போலீசை நம்பி நாங்கள் கட்சி நடத்தவில்லை.

இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.

No comments: