Thursday, December 11, 2008

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி; 90 சிங்கள சிப்பாய்கள் பலி


கொழும்பு, டிச.12-
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சிங்கள சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 180 பேருடன் ராணுவம் பின்வாங்கியது. ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர்.

விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்த 2 மாதமாக சிங்கள ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின்போது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில சிறிய நகரங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும் நெருங்க முடியவில்லை.
கிளிநொச்சிக்குள் ராணுவத்தை ழைய விடாமல் விடுதலைப்புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கிளிநொச்சி அருகேயுள்ள ஒலுமடு, முல்லைத் தீவு, ஓட்டுப்புலம், புத்துமுறிப்பு அறிவியல் நகர் ஆகிய இடங்களில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை உச்சக் கட்டத்தை எட்டியது. கிளிநொச்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இந்தச் சண்டை நடந்தது.

இருதரப்பினருக்கும் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கி சண்டையில் விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவம் மீது ஆவேச தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் சிங்கள படையினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
முதலில் பின்வாங்குவது போல் போக்கு காட்டிய விடுதலைப்புலிகள் பின்னர் தாங்கள் பாதுகாப்பு அரண் அமைத்திருந்த பகுதிகளில் இருந்து சிங்கள சிப்பாய்கள் மீது பயங்கர தாக்குதலை தொடுத்தனர். இதனால் முன்னேறிச் சென்ற ராணுவ வீரர்கள் நிலைகுலைந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிக்கிக்கொண்டார்கள்.
இந்தத் தாக்குதலில் 60 சிங்கள சிப்பாய்கள் பலியானார்கள். சிப்பாய்களின் பலரது உடல்கள் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த அகழிப் பகுதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், இந்த கடும் சண்டையில் 120 சிங்கள சிப்பாய் படுகாயமும் அடைந்தனர். பலியானவர்களில் 14 சிப்பாய்களின் உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.
இதேபோல் அறிவியல் நகர் என்ற இடத்தில் சிங்கள ராணுவத்தின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் 29 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இங்கு 60-க்கும் மேற்பட்ட சிங்கள சிப்பாய்கள் படுகாயமடைந்தனர். இன்னொரு தாக்குதலில் சிங்கள சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடுமையான சேதத்திற்குப் பின் இலங்கை ராணுவம் சண்டையை நிறுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக பின்வாங்கிச் சென்றது.
சண்டை நடந்த இடங்களில் இருந்து 4 ஏ.கே. ரக எந்திர துப்பாக்கிகள், 2 பி.கே.ரக எந்திர துப்பாக்கிகள், 11 டி.56 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளையும் விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்திடமிருந்து கைப்பற்றினார்கள்.


கிளிநொச்சி அருகே நடந்த சண்டையில் சிங்கள சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டதாகவும், 180 பேர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தங்களது இணையதளத்தில் அறிவித்துள்ளனர். இதேபோல் ராணுவம் பின் வாங்கி ஓடுவது போன்ற புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், விடுதலைப்புலிகளின் இந்த தகவலை சிங்கள ராணுவம் மறுத்துள்ளது. இது பற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாயணக்காரா கூறுகையில், கடந்த 2 நாட்களாக நடந்த சண்டைகளில் 20 வீரர்கள் மட்டுமே உயிரிழந்தார்கள். ராணுவத் தாக்குதலில் 27 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவம் பின் வாங்கி ஓடுவது போன்ற புகைப்படத்தை இப்போது எடுத்திருக்க முடியாது. ஆனால் அந்தப்பகுதியில் சண்டை நடந்தது உண்மைதான் என்று தெரிவித்தார்.

இதனிடையே கிளிநொச்சியின் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இலங்கை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தின.
ராணுவம் முன்னேறிச் செல்லும் விதமாக விடுதலைப்புலிகள் நிலைகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.

No comments: