Monday, December 8, 2008

தமிழக தலைவர்கள் பற்றி இலங்கை தளபதி ஆணவ பேச்சு: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தா.பாண்டியன் வலியுறுத்தல்


சென்னை, டிச.9-
தமிழக தலைவர்களை பற்றி இலங்கை தளபதி ஆணவமாக பேசிய விவகாரத்தில், மத்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் ராணுவ தளபதி பொன்சேகா, தமிழ்நாட்டு தலைவர்களை, கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனகவிஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

அந்த கனகவிஜயனின் ஆணவ சொற்கள் தான் இன்று பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியா என்ற வலிமைமிக்க நாட்டின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறது என்பது தெரிந்தும், அந்த தமிழ்நாட்டின் தலைவர்கள் தான் மத்திய ஆட்சி விழாமல் தாங்கி நிற்கும் தூண்கள் என்று தெரிந்தும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று எப்படி பிரகடனம் செய்ய முடிகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் கருத வேண்டும். ராணுவ தளபதியிடம் குவிந்துள்ள சிங்கள இனவெறியை படம் பிடித்துக் காட்டுகிறது.

வேறுநாடாக இருந்திருக்குமானால், இதற்கு எதிர்நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும். இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி, ஆணவத்துடன் இலங்கையின் சிங்கள ராணுவ தளபதி பேசிய இன்றைய சூழலில், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் இலங்கைக்கு செல்வது அர்த்தமற்றது.
இலங்கை பிரதமரை டெல்லிக்கு அழைக்க வேண்டும். இந்திய அரசையும் தமிழ் மக்களின் கவுரவத்தையும் அவமானப்படுத்திய பொன்சேகாவை இதற்காக பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். இதற்கு உடன்படவில்லை என்றால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மூடுவதற்கு இந்திய அரசு உடன் முடிவெடுக்க வேண்டும்.
இதில் தமிழக அரசியல் தலைவர்களின் பங்கு முக்கியமானது. தமிழ் மக்களின் சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.

No comments: