
சென்னை, டிச.9-
இலங்கை அதிபரையும், தளபதியையும் மன்னிப்பு கேட்கக்கோரி, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு ம.தி.மு.க. சார்பில் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தீவில் தமிழ் குலத்தையே பூண்டோடு அழிக்க திட்டமிட்டு ராணுவ தாக்குதலை நடத்தி தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்துவருவதை சிங்கள அரசு நிறுத்த வேண்டும்; போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், `தமிழக அரசியல் கோமாளிகள் சொல்வதை இந்திய அரசு கேட்காது' என்று இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதி சரத் பொன்சேகா கொக்கரித்து உள்ளார்.
சிங்களத் தளபதி, தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி உள்ள அக்கிரமம் மன்னிக்க முடியாத கொடுமை ஆகும். இந்தியா உலகின் அணு ஆயுத வல்லரசுகளுள் ஒன்று ஆகும். ஆனால், சுண்டைக்காய் நாடான இலங்கையில் சிங்கள இனவாத அரசு, 7 கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழகத்தை, அதன் சட்டமன்ற தீர்மானத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து, மண்டை கொழுப்புடன், எக்காளமிடும் அவமானத்தை இந்திய அரசுதான் ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் வெளிவிவகார மந்திரியை டெல்லிக்கு வரவழைத்து, `போர் நிறுத்தம் செய்கிறாயா? இல்லையா' என்று எச்சரிக்கை செய்வதற்கு பதிலாக, இந்திய அரசின் வெளி உறவுத்துறை மந்திரியை இலங்கைக்கு தூது அனுப்பப்போகிறோம் என்று சொல்வதே மானக்கேடு ஆகும். `இனியும் பொறுப்பதற்கு இல்லை' என்று தமிழ் மக்கள் எரிமலையாய்ச் சீறவேண்டிய தருணம் ஏற்பட்டு விட்டது.
இந்திய பிரதமர் உடனடியாக இலங்கை அரசுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவும், இலங்கைத் தளபதி சரத் பொன்சேகாவும் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கோருமாறு இந்தியா நிர்பந்திக்க வேண்டும்; அப்படி மன்னிப்புக் கேட்காவிடில் இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து மத்திய அரசு வெளியேற்ற வேண்டும்.
இலங்கை அதிபரும், தளபதியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இலங்கைத் தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி, டிசம்பர் 10-ந் தேதி (நாளை) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு என்னுடைய தலைமையில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment