Monday, December 8, 2008

டெல்லியில் காங்கிரஸ் வெற்றி


புதுடெல்லி,டிச.9-
டெல்லியில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஷீலா தீட்சித் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

டெல்லி மாநிலத்தில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இதில் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ், ஆட்சியை பறி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை பொய் ஆக்கி, காங்கிரஸ் வெற்றி பெற்றது.
டெல்லி மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 69 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா 23 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளிலும், லோக்தளம், லோக் ஜனசக்தி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறுவது, இதுவே முதல்முறை ஆகும்.
ஆட்சி அமைப்பதற்கு 35 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதுமானது. அதை விட அதிகமான தொகுதிகளை பெற்று, ஆட்சியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதல்-மந்திரி ஷீலா தீட்சித், புதிதாக உருவாக்கப்பட்ட புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 39 ஆயிரத்து 747 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் விஜய் ஜாலி 25,669 ஒட்டுகள் பெற்றார். எனவே, ஷீலா தீட்சித் 14 ஆயிரத்து 78 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ. ஆவது, இது 3-வது தடவை ஆகும்.
அவரது மந்திரிகள் 6 பேரும் வெற்றி பெற்றனர். பா.ஜனதாவின் முதல்-மந்திரி பதவி வேட்பாளர் வி.கே.மல்கோத்ராவும் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றிச் செய்தியை அறிந்ததும், டெல்லி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். மேள தாளம் முழங்க ஆடிப்பாடினர். அங்கு வந்த முதல்-மந்திரி ஷீலா தீட்சித், மாநில காங்கிரஸ் தலைவர் ஜே.பி.அகர்வால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அவருக்கு சோனியா பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் 3-வது முறையாக ஷீலா தீட்சித் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பா.ஜனதாவின் தோல்வி எதிர்பாராதது என்றும், இத்தோல்வி பற்றி ஆராயப்படும் என்றும் வி.கே.மல்கோத்ரா கூறினார்.

No comments: