Thursday, December 4, 2008

பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்கிறார்


இலங்கையில் போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்த மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல் - அமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். அதை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
சென்னை, டிச.5-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் குழு டெல்லி சென்றது.

டெல்லியில் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமரிடம் மனு கொடுத்தனர். அப்போது மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி உடன் இருந்தார்.

இந்தக் கூட்டத்திற்கு பின் முதல்-அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் சந்தித்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரதமரிடம் மனு அளித்திருக்கிறீர்கள். என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனுவை கொடுத்த பிறகு, அதனை வலியுறுத்தி நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களில் பலரும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டோம். இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை பல கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடத்தில் வலியுறுத்திப் பேசினார்கள். அவற்றுக்கெல்லாம் பிரதமரும், வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் விளக்கம் அளித்தார்கள்.
இறுதியாக நான் அனைவர் சார்பிலும் பிரதமரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இலங்கையிலே நிலைமைகள் சீர்படுவதைப் பற்றி கவனிக்கவும் போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்துவதற்காகவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டேன். அதனை ஏற்று, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க பிரதமர் ஒப்புக் கொண்டார்.
பிரணாப் எப்போது இலங்கைக்குச் செல்வார் என்று நான் மீண்டும் குறுக்கிட்டு கேட்டேன். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் அவர் இலங்கை செல்வார் என்று பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.

கேள்வி:- சோனியா காந்தியைச் சந்தித்தீர்களா?
பதில்:- அவர்களையும் சந்தித்தேன். என்னுடன் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, என் மகள் கனிமொழி எம்.பி.யும் வந்திருந்தார்கள். சோனியாவிடம் பிரதமரிடம் அளித்த இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்சினை குறித்த மனுவின் நகலைக் கொடுத்தேன். பிரதமரிடம் பேசிய விவரங்களை குறித்து விளக்கியதோடு, சோனியாவையும் அதிலே கவலை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கேள்வி:- பிரணாப் முகர்ஜி, இலங்கைக்குச் செல்வதால் நிலைமை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
பதில்:- சாதகமாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். நல்ல உள்ளங்களிலிருந்து வருகின்ற பதில் அதுவாகத்தான் இருக்கும்.
கேள்வி:- இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசப்பட்டதே?
பதில்:- அதைப் பற்றி அப்போதும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் பேசியிருக்கிறேன். அவ்வாறு ஆயுத உதவி செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

கேள்வி:- பிரணாப் முகர்ஜி செல்லும் போது தமிழ்ப் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்படுமா?
பதில்:- அவர்கள் இலங்கைக்குச் செல்ல ஒப்புக் கொண்டுவிட்டார்கள். போகும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களைப் பற்றி பின்னர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
கேள்வி:- பிரதமரோடு நடைபெற்ற சந்திப்பில் திருப்தி இல்லை என்று இந்திய கம்னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அது அவருடைய கருத்து.
கேள்வி:- பிரதமரிடம் வலியுறுத்துவது இதுதான் கடைசியானது என்றும் தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- நான் அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். அதனால் நான் இதற்கெல்லாம் பதில் சொல்லி ஒற்றுமையைச் சிதைக்க விரும்பவில்லை.

கேள்வி:- அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., போன்ற கட்சிகள் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லையே?
பதில்:- அது அவர்களுடைய உணர்வைக் காட்டுகின்றது.
கேள்வி:- இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்த போது, போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:- கச்சத் தீவை மீட்பதைப் பற்றி பேசினீர்களா?
பதில்:- கச்சத் தீவை மீட்டே தீருவோம் என்று அம்மையார் கோட்டையிலே கொடியேற்றி விட்டு முழங்கிய முழக்கம் எல்லாம் தமிழக மக்கள் அறிந்த ஒன்று. இதுபோன்ற பிரச்சினைகளில் ஒரு ஒப்பந்தம் போட்டு முடிந்த பிறகு, அந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது பற்றியும், அதை மாற்றுவது என்பது பற்றியும் முடிவெடுப்பது என்பது அகில உலக சட்டப் பிரச்சினைக்கு உட்பட்டது.
கேள்வி:- இலங்கைப் பிரச்சினையில் சில அதிகாரிகள்தான் தவறு செய்கிறார்கள் என்றும், குறிப்பாக அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்றவர்கள்தான் முக்கிய காரணம் என்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே?
பதில்:- அவ்வாறு பேசப்பட்டால், அதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோமாக.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: