Sunday, December 7, 2008

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 42 பேர் கைது


ராயபுரம், டிச.8-
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 42 பேர், சென்னை கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, இந்திய கடல் பகுதியில், கடலோர காவல் படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை கடல் பகுதியிலும், இந்திய கடலோர காவல் படையினர், தங்கள் கப்பலில், 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில், இலங்கையை சேர்ந்த 8 விசைப்படகுகள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தன. உடனே கடலோர காவல் படையினர், தங்கள் கப்பலில், அந்த படகுகள் நின்ற இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த படகுகளில் இலங்கை மீனவர்கள் 42 பேர் இருந்தனர். அவர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அனைவரையும் படகுகளுடன், சென்னை காசி மேடு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை, போலீசாரிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து 42 பேரையும் போலீசார் கைது செய்து, காசி மேடு மீன் பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, இலங்கை மீனவர்களிடம் துணை கமிஷனர் காமினி, உதவி கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் சபானந்தம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், ``நாங்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது காற்று பலமாக வீசியதால், வழி தவறி, இந்திய எல்லைக்குள் வந்து விட்டோம்'' என்று தெரிவித்தனர்.
இலங்கை மீனவர்கள் கூறும் காரணம் சரிதானா? அல்லது வேறு ஏதும் உள் நோக்கத்துடன் இந்திய கடல் பகுதிக்குள் ழைந்தார்களா? என்று, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: