Sunday, December 7, 2008

5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று முடிவு தெரியும்




புதுடெல்லி, டிச.8-
5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்-யார்? என்பது இன்று பகலில் தெரிந்துவிடும்.

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாயின. இங்கு தற்போது முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவியது.
டெல்லி
டெல்லியில் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாரதீய ஜனதா சார்பில் முதல்-மந்திரி பதவி வேட்பாளராக மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா அறிவிக்கப்பட்டார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியது. தலைநகரான டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா கடுமையாக பாடுபட்டது. எனவே அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்று ஷீலா தீட்சித் மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா? என்பது இன்று தெரிந்து விடும்.
மத்திய பிரதேசம்
230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி இருப்பதால் இந்த மாநிலத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கார் மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த ராமன்சிங் முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக தேர்தல் முடிவு அமையும் என்று கருதப்படுகிறது.
ஆட்சியை பிடிப்பது யார்?
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
5 மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடிந்து மதியத்திற்குள் முடிவுகள் அனைத்தும் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பகலில் தெரிந்துவிடும்.
பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகளும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஓட்டு போட்டுவிட்டு வருபவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த தடை விதிக்கப்பட்ட பின் முதன் முதலாக இந்த 5 மாநிலங்களில்தான் தேர்தல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

No comments: