Showing posts with label டெல்லி. Show all posts
Showing posts with label டெல்லி. Show all posts

Monday, December 8, 2008

5 மாநில தேர்தல் முடிவு; சமூகநீதியும், மதச்சார்பின்மையும் வென்றன கி.வீரமணி அறிக்கை


சென்னை, டிச.9-
திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
5 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 3 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 10 ஆண்டுகளாக பா.ஜ.க. வசமிருந்த ராஜஸ்தானை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் சம நிலையில் உள்ளன. பா.ஜ.க. மத்திய பிரதேசம் ஒன்றில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.
விலைவாசி ஏற்றம், மும்பையில் தீவிரவாத தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்களுக்கிடையே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, மக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்கின்றனர் என்பதும் பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டனர் என்பதும் தெரியவருகிறது. இந்த வெற்றி, சோனியாகாந்திக்கு பிறந்த நாள் பரிசாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது


டெல்லி, மிசோரம் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தானில் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.
புதுடெல்லி, டிச.9-
ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்துக்கு தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் கருதப்பட்டன.
5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தன.
மொத்தம் உள்ள 5 மாநிலங்களில் டெல்லி, மிசோரம் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய 2 மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்து இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் அங்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியை இழந்து விட்டது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 96 இடங்கள் கிடைத்தன. ஆளும் கட்சியான பாரதீய ஜனதா 78 இடங்களில் வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சிக்கு 3 இடங்களும், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம், லோக்தந்திரிக் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. சுயேச்சைகள் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த கட்சி சுயேச்சைகளின் ஆதரவுடன் மந்திரி சபை அமைக்கிறது.

ஜல்ரபதான் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி வசுந்தரா ராஜே வெற்றி பெற்றார். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், பாரதீய ஜனதா ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் எஸ்.கே.சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்களில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் சர்தார்புரா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

டெல்லியில் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 42 இடங்களும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 23 தொகுதிகளும் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய லோக்தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ் சார்பில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ஷீலா தீட்சித் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.
பாரதீய ஜனதா சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.கே.மல்கோத்ரா தான் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வெற்றி பெற்றார்.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், மிசோ தேசிய முன்னணியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்துக் கொண்டது. அங்கு காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.
40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் 32 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மிசோ மக்கள் மாநாடு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்றன.

2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்-மந்திரியும் மிசோ தேசிய முன்னணியின் தலைவருமான சோரம்தங்கா தோல்வி அடைந்தார்.
மிசோரம் மாநிலத்தில் ஏற்கனவே 3 முறை முதல்-மந்திரியாக இருந்தவரும் மாநிலகாங்கிரஸ் தலைவருமான லால்தன்ஹாவ்லா மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.


மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா 144 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 70 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 இடங்களும், உமா பாரதியின் பாரதீய ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் இதர கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன.
புத்னி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ராஜ்புத்தை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போபால் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடி சட்டசபை பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (முதல்-மந்திரி) சிவராஜ் சிங் சவுகானை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே அவர் மீண்டும் மத்திய பிரதேச முதல்-மந்தியாக பதவி ஏற்கிறார்.

சத்தீஸ்கார் மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. இங்கு அந்த கட்சியைச் சேர்ந்த ராமன் சிங் முதல்-மந்திரியாக இருக்கிறார்.
90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், ஆளும் பாரதீய ஜனதா 50 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 38 இடங்கள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ராஜ்நந்தகோன் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ராமன் சிங் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் மார்வாகி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியும் வெற்றி பெற்றார்.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூர் நகரில் இன்று கூடி ராமன் சிங்கை முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே அவர் 2-வது முறையாக சத்தீஸ்கார் முதல்-மந்திரியாக வருகிற 12-ந் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், அரசியல் கட்சிகள் வெற்றி-தோல்வியை மதிப்பீடு செய்வதில் மும்முரமாக உள்ளன.
இந்த தேர்தல் முடிவுகளை பாடமாகவும் அடிப்படையாகவும் கொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான உத்திகளை கட்சிகள் வகுக்கும் என்று கருதப்படுகிறது.

Sunday, December 7, 2008

5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று முடிவு தெரியும்




புதுடெல்லி, டிச.8-
5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்-யார்? என்பது இன்று பகலில் தெரிந்துவிடும்.

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாயின. இங்கு தற்போது முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவியது.
டெல்லி
டெல்லியில் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாரதீய ஜனதா சார்பில் முதல்-மந்திரி பதவி வேட்பாளராக மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா அறிவிக்கப்பட்டார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியது. தலைநகரான டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா கடுமையாக பாடுபட்டது. எனவே அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்று ஷீலா தீட்சித் மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா? என்பது இன்று தெரிந்து விடும்.
மத்திய பிரதேசம்
230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி இருப்பதால் இந்த மாநிலத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கார் மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த ராமன்சிங் முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக தேர்தல் முடிவு அமையும் என்று கருதப்படுகிறது.
ஆட்சியை பிடிப்பது யார்?
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
5 மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடிந்து மதியத்திற்குள் முடிவுகள் அனைத்தும் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பகலில் தெரிந்துவிடும்.
பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகளும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஓட்டு போட்டுவிட்டு வருபவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த தடை விதிக்கப்பட்ட பின் முதன் முதலாக இந்த 5 மாநிலங்களில்தான் தேர்தல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.