Friday, December 5, 2008

பாராளுமன்ற தேர்தலில் "எம்.பி. ஆகி பாராளுமன்றத்துக்கு செல்வேன்'' நடிகர் எஸ்.வி.சேகர்.சபதம்


சங்கரன்கோவில், டிச.6-
"வருகிற பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. ஆகி பாராளுமன்றத்துக்கு செல்வேன்'' என்று நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறினார்.

குருபெயர்ச்சியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சாமி கும்பிடுவதற்காக சினிமா நடிகரும், மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் நேற்று காலை வந்தார்.
சாமிதரிசனம் முடிந்த பிறகு கோவிலில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் 2006-ல் சங்கரன்கோவிலில் கோமதிஅம்பாள் சன்னதியில் உள்ள ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு சென்னை சென்றேன். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா என்னை அழைத்து மைலாப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவித்தார்.
அதே போல் இன்று குருபெயர்ச்சி விழாவையொட்டி சங்கரன்கோவிலுக்கு வழிபடுவதற்காக வந்து உள்ளேன். இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. ஆகி டெல்லிக்கு செல்வேன். நான் எந்த கட்சி சார்பாக எம்.பி. ஆவேன் என்று கடவுளுக்கு தெரியும்.

இந்த நிமிடம் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகத்தான் இருக்கிறேன். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவருக்கும், எனக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. நான் எந்த கட்சிக்கு போனாலும் அவர்மீதான அன்பு குறையாது.
ஆனால் அ.தி.மு.க.வில் என்னை ஓரம்கட்டுகிறார்கள் என்பது ஊரறிந்த செய்தி. என்னை ஓரம் கட்டுவதால் அது எம்.எல்.ஏ. பதவிக்குத்தான் பாதிப்பே தவிர, எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை.

பகுஜன் சமாஜ் கட்சியினர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள் பிராமணர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக கூறி உள்ளார்கள். பிராமணர்கள் ஒருபோதும் சாதிச்சண்டையில் ஈடுபடுவதாக தெரியவில்லை.
பிராமணர்களும், தலித்களும் ஒன்று சேரும்போது மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் உண்டாக்கும். பிராமண அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக உருவாக்கினால் அதற்கு நான் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுத்தி காட்டுவேன்.

தே.மு.தி.க. கட்சி தலைவரும், எனது நண்பருமான விஜயகாந்தை சிலர் குறைவாக மதிப்பிட்டு உள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலிலும், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார்.
நான் யாரையும் எதிரிகள் என்று நினைப்பதில்லை. அவ்வாறு எதிரிகள் யாரும் இருந்தால் அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார்.

இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

No comments: