Friday, December 5, 2008

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கூட்டணி


சென்னை, டிச.6-
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு மற்றும் இந்திய கம்னிஸ்டு கட்சிகள், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன், கடந்த சில மாத காலமாக மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தும், இந்திய கம்னிஸ்டு கட்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும் அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயலலிதாவை இந்திய கம்னிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் 3-ந் தேதி ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5-ந் தேதி சென்னையில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, பிரகாஷ் கரத்தை மதிய விருந்துக்கு வரும்படி அழைத்தார்.

அதன்படி நேற்று ஜெயலலிதா அளித்த மதிய விருந்தில் பிரகாஷ் கரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன், தமிழ்நாடு மாநில செயலாளர் என்.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வந்த பிரகாஷ் கரத்துக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து தேர்தல் கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சியும் இணைந்து நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மதியம் 1.30 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியில் வந்த பிரகாஷ் கரத் நிருபர்களிடம் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவும், அரசியல் ஆலோசனைக் குழுவும் கூடி தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுத்துள்ளது. அதன்படி நானும், ஜெயலலிதாவும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது.
பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது உள்பட மற்ற விஷயங்களுக்காக நாங்கள் மீண்டும் ஒருமுறை கூடி பேசுவது என்றும் முடிவு செய்துள்ளோம். இந்த சந்திப்புக்கு இந்திய கம்னிஸ்டு கட்சியின் வற்புறுத்தல் எதுவும் இல்லை. இந்திய கம்னிஸ்டு கட்சியினரும் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளனர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி இல்லை. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும், மதசார்பற்ற ஜனதா தளத்துடனும் ஒரு இணக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. வேறு எந்த கட்சியுடனும் இதுவரை தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தவிர சமீபத்தில் மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல், இலங்கை தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, இந்திய பொருளாதார சீர்கேடு மற்றும் இந்திய அரசியல் நிலவரம் போன்ற விஷயங்கள் குறித்தும் ஜெயலலிதாவுடன் பேசினோம். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இப்போது எழவில்லை."
இவ்வாறு பிரகாஷ் கரத் கூறினார்.

No comments: