
சென்னை, டிச.7-
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவது, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி குழுவின் டெல்லி பயணத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லிக்கு சென்றது ஈழ தமிழர் வாழ்வுரிமையில் ஒரு சிறந்த திருப்பமாக அமைந்துள்ளது. முதல்-அமைச்சரின் முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது. நிவாரண உதவிகள் உரியவர்களுக்கு சேர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளதும் ஆறுதலாக இருக்கிறது.
இறுதி லட்சியம் போர் நிறுத்தம் என்பது தான். இதற்காக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவும் பிரதமர் ஒப்புக் கொண்டது இந்த பயணத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இதனை சிலர் விமர்சிப்பது அரசியல் மாற்றத்தால் வந்த விளைவு.
புதிய புயல் வந்ததும், ஏற்கனவே வீசிய புயலை மறந்துவிட்டது போல, மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்ததும், மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தை அனைவரும் மறந்துவிட்டனர். தீவிரவாதம் எந்த கட்சி, எந்த அமைப்பை சேர்ந்ததாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மத்திய அரசு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைவுபடுத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இப்போது புதிதாக அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அருந்ததியருக்கு குறைந்தபட்சம் 3 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இந்த பிரச்சினையில் எந்தவித சட்ட சிக்கலும் இல்லாத வகையில் நீதிபதி ஜனார்த்தனம் தீவிரமாக அலசி ஆராய்ந்து பார்த்து தான் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அரசும் இதனை பரிசீலித்து தான் அறிவித்துள்ளது. எதிர்காலத்திலும் எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடாதபடி இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மழை வெள்ளத்தால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு எடுத்துவரும் வெள்ள நிவாரண பணிகள் பாராட்டத்தக்கதாக உள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் குடிசைகளில் வசித்துவரும் விவசாயிகள் குடிசை வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். குடிசை மாற்று வாரியம் போல, குடிசைகளில் வசித்து வரும் விவசாயிகளுக்கும் தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
No comments:
Post a Comment