Tuesday, December 9, 2008

2011-ம் ஆண்டு தமிழக தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் கருணாநிதி அறிக்கை


சென்னை, டிச.10-
வரும் பாராளுமன்ற தேர்தலிலும், 2011-ம் ஆண்டு நடைபெறும் தமிழக பொது தேர்தலிலும் ஆளும் கட்சி கூட்டணிதான் வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கண்டு; நாம் மட்டுமல்ல; இந்த நாடே ஒரு நம்பிக்கை கலந்த மகிழ்ச்சி கொண்டுள்ளது. "அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை'' என்கிற அளவுக்கு 5 மாநிலங்களில்; 2 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றும், தக்க வைத்துக் கொண்டும் - மற்ற 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியும்; மக்களிடம் மத சார்பற்ற நிலைப்பாடும், மத நல்லிணக்கப் பண்பாடும் எத்தகைய உறுதி மிக்கதாய் விளங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டி நம்மைப் போன்ற லட்சியவாதிகளை; இன்னும் இன்னும் எழுச்சி கொள்ளவைக்கிறது!
"மதவாதி, பிற்போக்குவாதி, புராணிகர், பழைமைவாதி - இவர்களை எல்லாம் எமக்கு பிடிக்காது; மூடநம்பிக்கை முடை நாற்றத்தைப் போக்கி சமுதாயத்தை முல்லை மலர் தோட்டமாக்குவதே எமது குறிக்கோள்'' என்று குரலெழுப்பியோர்; இன்று ஆரூடம், சோதிடம், ஐதீகம் என்பனவற்றை சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்வோரின் `அத்யந்த தோழர்'களாகி விட்டதையெண்ணிப் பெருமூச்செறியும் போது; அவர்களுக்கும் ஓர் இனிய எச்சரிக்கையாக இந்த தேர்தல் முடிவு முகிழ்த்திருக்கிறது என்பதை நம்மால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

எத்தனை எதிர்ப்புகள் - ஏகடியங்கள் - வசைவுகள் - சாபங்கள் - சாட்டையடிச் சொல்லெடுத்துத் தொடுத்த கண்டனக் கணைகள் - கொடியேந்தியவர்கள் கொட்டிய கொடூர முழக்கங்கள் மட்டுமல்ல; உலகத்தின் முன்னேயே காட்டிக் கொடுக்கும் கயமைச் செயல்கள் - கடுகை மலையாக்கி கடும் எதிர்ப்பு காட்டி கவிழ்த்து விடச் செய்த சூழ்ச்சிகள் - இவையனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு; கடமையை ஆற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து; அனைத்து முனைகளிலும் அன்னைத் திருநாடாம் - இந்திய நாட்டை ஒளிமிக்கதாக விளங்கச் செய்திட; அனுபவச் சுரங்கமாம் பிரதமர் மன்மோகன்சிங்கும் - ஆற்றலின் உறைவிடமாம்; அன்பின் பிறப்பிடமாம் சோனியாகாந்தியும்; தொய்வில்லாத் தொண்டு புரிந்து; சரவிளக்குகளாக ஏற்றி வைத்த சாதனைகளுக்குக் கிடைத்த பரிசு தான் இந்த "ஐந்துக்கு மூன்று'' என்ற வெற்றி!.
இதுபோன்ற தேர்தல் நேரங்களில் - இதுவரை ஆட்சியில் இருந்த கட்சி வெற்றி பெறாது - எதிர்க்கட்சிக்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள் - என்ற எதிர்பார்ப்பு ஏடுகளிலே எழுதப்படும், மக்களும் அப்படியே கருதுவார்கள். கருத்துக்கணிப்புகளும் அவ்வாறே சொல்லப்படும். ஆனால் இந்தியாவின் தலைநகரிலேயே - டெல்லியில் ஆளுங்கட்சியாக 2 முறை இருந்து விட்ட காங்கிரஸ் கட்சி, 3-வது முறையாக வெற்றி பெற்று, ஆளுங்கட்சி மீண்டும் பதவிக்கு வராது என்ற ஆரூடத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டெல்லியில் பா.ஜ.க.விற்கு 36 இடங்கள் முதல் 42 இடங்கள் வரை கிடைக்குமென்று கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அதையும் முறியடித்து, 23 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆட்சிக்கு எதிரான கருத்து மக்களிடம் இல்லை என்பதை இந்தியாவின் தலைநகரிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதாலும் - விரைவில் ஒருசில மாதங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வர விருப்பதாலும் - காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பெருமளவிற்கு இழப்பு ஏற்படும் என்ற கருத்தும் சொல்லப்பட்டு - அகில இந்திய அளவில் 3-வது அணி பற்றி பெரிதாகப் பேசப்பட்டு - அந்த அணியிலே ஓட்டை உடைசல்களையெல்லாம் சேர்க்கின்ற பணியிலும் ஒரு சிலர் முற்பட்டனர். அவர்களின் எண்ணங்களிலும் மண் விழுகின்ற அளவிற்கு 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் - மக்களுக்கு வேண்டியவற்றை நாம் தொடர்ந்து செய்து வந்தால் - அவர்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள் என்பதற்கு நடைபெற்று முடிந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
அடுத்து ஒருசில மாநிலங்களில் நடைபெற்ற தீவிரவாதச் செயல்களும், விலைவாசி உயர்வும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான முடிவினைத்தான் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர்களும் உண்டு. ஆனால் இவற்றுக்கு ஆளுகின்ற அரசு மட்டுமே பொறுப்பு என்று கருதாமல் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
"ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் மனோபாவம் என்பது பொதுவாக ஒரு காரணி என்றாலுங்கூட, அதுவே முடிவான காரணியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்பதைத் தான் இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதைத் தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சியும், மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்காரிலும் பா.ஜ.க.வும் எடுத்துக்காட்டியிருக்கின்றன".
ராஜஸ்தான் மாநிலத்தில் இதற்கு மாறாக ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அங்கே 62 தொகுதிகளில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு எதிராக, அந்த கட்சியைச் சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்கிறபோது தோல்விக்கான மற்றொரு காரணத்தையும் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது.

"இவர்களாவது இனி இந்தியாவை ஆள்வதாவது'' என்று மரத்தடி ஜோசியம் - மதகடி ஜோசியம் - பார்த்துக் கொண்டிருந்தவர்கள்; அவர்கள் குடித்த மனப்பால் அத்தனையும் மண்ணில் கொட்டிவிடச் செய்ய - இந்த மகத்தான ஜனநாயக ரீதியான - மதவெறி மாய்த்த - மதநல்லிணக்கம் பூத்த - மாபெரும் வெற்றியாக; காங்கிரஸ் அணிக்கு இது அமைந்துள்ளது.
இங்கே தமிழகத்திலே கூட - நாம் நாளொரு சாதனையும், பொழுதொரு திட்டமுமாக அறிவித்து - அவற்றை கிடப்பிலே போட்டு விடாமல் நடைமுறைப்படுத்தி வருவதைப் பற்றி எந்த விதமான குற்றமும் சொல்ல முடியாத நிலையில் - ஆளுங்கட்சிக்கு எதிராகத் தான் மக்களின் வாக்குகள் விழும் என்ற குருட்டு நம்பிக்கையில் எதிர்க்கட்சியின் தயவுக்காக துடியாய்த் துடிக்கிறார்கள். கூட்டணியில் இடத்தைப் பிடிப்பதில் யார் முந்தி என்று போட்டிபோடுகிறார்கள்.

இந்த எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக இருந்தபோது ஆடிய ஆட்டமென்ன? பாடிய பாட்டென்ன? என்பதை அவர்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருந்த போதிலும் மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதிலைத் தரத்தக்க விதத்திலே தான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ளன.
இந்த வெற்றிப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை டெல்லிப் பட்டணத்தில் பாராளுமன்றத்தில் அமர வைத்து; தொடர்ந்து நாட்டுப் பரிபாலனத்தை நடத்திடுக என்று ஆணையிடும் அளவுக்கு அமைந்திடத் தான் போகிறது! அதைத் தான் நேற்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டபோதும் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது காங்கிரஸ் கட்சி தான் என்ற பதிலை அளித்தேன். 2009-ல் டெல்லியிலே மட்டுமல்ல - 2011-ல் நடைபெறவுள்ள தமிழகப் பொதுத்தேர்தலிலும் ஆளுங்கட்சி கூட்டணி தான் வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும். உன்னை நம்பித் தான்உடன்பிறப்பே; உன் அண்ணன் இந்த உறுதி அளிக்கிறேன்!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: