Monday, December 8, 2008

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: 2009 பிப்ரவரி மாதம் நடத்த காங்கிரஸ் திட்டம்




புதுடெல்லி, டிச.9-
3 மாநிலங்களில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாராளுமன்றத்துக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான், டெல்லி, மிஜோரம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இதே வேகத்தில், பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியை ஈட்ட திட்டமிட்டுள்ளது.


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், தற்போது மக்களின் மனநிலை தங்களுக்கு சாதகமாக இருப்பதாக கருதும் காங்கிரஸ் கட்சி, பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியதாவது:-
மும்பை தாக்குதல் சம்பவம், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலைப்பட்டோம். ஆனால் அதற்கு மாறாக, காங்கிரசுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம், நன்றாக செயல்படுபவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் தோல்வி அடைந்த மத்தியபிரதேசத்தில் கூட அதன் பலம் அதிகரித்துள்ளது.
3 மாநிலங்களிலும் முதல்-மந்திரி யார் யார்? என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார்.

இந்த வெற்றியால் தற்போது காங்கிரஸ் கட்சி பலமான நிலையில் இருப்பதால், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அநேகமாக, பிப்ரவரி மாதம் கூட தேர்தல் நடத்தப்படலாம். அரசியலில் எல்லாமே சாத்தியம்தான். இதுபற்றி இன்னும் சில நாட்களில் ஆலோசனை நடத்தப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

No comments: