Tuesday, December 2, 2008

நடிகர்-நடிகைகள் அஞ்சலி




சென்னை, டிச.3-

மும்பையில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட `கமாண்டோ' படை வீரர்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர்-நடிகைகள் அனைவரும் வரிசையில் நின்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையம் வைத்து வணங்கினார்கள்.



மும்பையில் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க சென்றபோது, `கமாண்டோ' படை வீரர்களும், போலீசாரும் வீர மரணம் அடைந்தார்கள்.

அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. மரணம் அடைந்த `கமாண்டோ' வீரர்கள் மற்றும் போலீசாரின் உருவ படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அருகில் உள்ள திரையில், 187 ரோஜா பூக்கள் ஒட்டப்பட்டிருந்தன.





தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொதுச்செயலாளர் ராதாரவி தலைமையில் நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதலாவதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், பார்த்திபன், அர்ஜுன், தனுஷ், ஜெயம் ரவி, பரத், ஸ்ரீகாந்த், ஜீவா, ரமேஷ், கார்த்தி, பிரசன்னா, கரண், முரளி, அப்பாஸ், ராஜ்கிரண், சிபிராஜ், சக்தி, உதயா, விவேக், செந்தில், எஸ்.வி.சேகர், சார்லி, மன்சூர் அலிகான், சரத்பாபு, அலெக்ஸ், விச்சு, மனோபாலா, ஜெய், ஆர்.கே, ஜே.கே.ரித்திஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், லதா, ஸ்ரீப்ரியா, சுகன்யா, மும்தாஜ், கீர்த்தி சாவ்லா, சந்தியா, குயிலி, சத்யப்ரியா, டைரக்டர்கள் பி.வாசு, விசு, டி.பி.கஜேந்திரன், ராஜகோபால், பட அதிபர்கள் முக்தா சீனிவாசன், வி.சி.குகநாதன், கே.ராஜன், பட்டியல் சேகர், விஜயமுரளி, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகர் சங்க பொருளாளர் கே.என்.காளை, துணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், மற்றும் ஏராளமான துணை நடிகர்-நடிகைகளும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.



நடிகர்கள் அர்ஜுன், ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் ராணுவ வீரர்களைப்போல் `சல்ட்' அடித்து தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினார்கள்.

பார்த்திபன், மலர் வளையம் வைத்தார். அதில், ``மேடை, வாகனம், கவசம் போதாது. குண்டு துளைக்காத மனிதம் வேண்டும்'' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

மும்பை சம்பவம் பற்றி நடிகர் சத்யராஜ் கூறும்போது, ``மும்பையில் வீர மரணம் அடைந்த கமாண்டோ படை வீரர்கள்தான் நிஜமான கதாநாயகர்கள். அரசாங்கமும், போலீசும் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும்'' என்றார்.





நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி உறுதிமொழிகள் அடங்கிய வாசகத்தை படித்தார். மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரும் அதை திரும்ப சொன்னார்கள். அந்த உறுதிமொழி வாசகங்கள் வருமாறு:-

``தாய் மண்ணை காக்க இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், காவல்துறை வீரர்கல், அனைத்து பாரத தாயின் பிள்ளைகளுக்கும், கலையுலகை சார்ந்த சகோதர-சகோதரிகளின் வீர வணக்கம். தீவிரவாதிகளால் உயிர் இழந்த நம் தேசத்து, வெளிநாட்டு அப்பாவி மக்களுக்கும், எங்களின் உள்ளார்ந்த உணர்வாஞ்சலி. மலரஞ்சலி. கண்ணீர் அஞ்சலி. இன்று முதல் உறுதி ஏற்போம். இந்தியராக இருப்போம். இந்திய தேசம் காப்போம். மனித வதம் தவிர்ப்போம். மனிதநேயம் வளர்ப்போம். வேண்டாம் தீவிரவாதம். வேண்டும் தாயாக நேசம். வேண்டாம் பிரிவினை வாதம். வேண்டும் பிரிவில்லா பாரத தேசம். தாய் மண்ணே வணக்கம்.''
இவ்வாறு அந்த உறுதிமொழி வாசகங்கள் அமைந்திருந்தன.

No comments: