Wednesday, January 7, 2009

தி.மு.க. ஆட்சியில் வன்முறை நடப்பதாக குற்றம் சுமத்துவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்


சென்னை, ஜன.8-

தி.மு.க. ஆட்சி காலத்தில் வன்முறைகள் நடப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- திருமங்கலம் தொகுதி நிலவரம் பற்றி கருத்து கூறிய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால் சாமி "முன்பு பீகார்- இப்போது தமிழ்நாடு'' என்ற அளவிற்கு கூறி வருத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதே?

பதில்:- அவர் கூறியிருப்பது- பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடைபெற்றபோது அதிக அளவில் வன்முறை, அதற்கு தேர்தல் கமிஷன் துணை என்பதைப் போல சிலர் பிரசாரம் செய்ததை நினைவிலே கொண்டு, தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேண்டுமென்றே கோளாறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஜெயலலிதா, கோபால்சாமி, தா.பாண்டியன் போன்றவர்கள் கற்பனை செய்து சொல்லியிருப்பதால் "முன்பு பீகார்- இப்போது தமிழ்நாடு'' என்று ஒப்பிட்டுச் சொல்லியிருப்பாரென்று கருதுகிறேன்.

ஏனென்றால் இவ்வளவு பெரிய குற்றசாட்டினை தேர்தல் நேரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர் யாரும் சாட்டியதில்லை. ஜெயலலிதா சொன்னது போல் அப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடக்குமானால் தேர்தல் கமிஷன் ஒன்றே தேவையில்லை அல்லவா?


கேள்வி:- சில காவல் துறை அதிகாரிகளின் பெயர்களை சொல்லி அவர்களை பதவி நீக்கம் செய்யும் வரையில் ஓய மாட்டேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அவர் பதவியிலே இருந்த போது அதிகாரிகளையெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவதாகச் சொன்னவர் ஆயிற்றே! அவர் ஆட்சியிலே இருந்த போது தேர்தல் ஆணையம் காவல்துறை அதிகாரி ஒருவரை மாற்றம் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கே சென்றவர்தான் ஜெயலலிதா.

கேள்வி:- திருமங்கலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்று வைகோ பேசியிருக்கிறாரே?

பதில்:- முயற்சி செய்து கண்ட அனுபவத்தினை கூறியிருக்கிறார் போலும்.


கேள்வி:- திருமங்கலத்தில் தா.பாண்டியன் பேசும் போது, உங்கள் பக்கம் வெற்றுக்காற்று தான் வீசுவதாகவும், அவர்கள் பக்கம் வீசுவது தான் வெற்றி காற்று என்றும் பேசியிருக்கிறாரே?

பதில்:- அவர் பக்கம் கரன்சி காற்று வீசுவதாகத்தான் அந்த கட்சியிலே உள்ள அடி மட்டத் தொண்டர்களே கூறிக்கொள்கிறார்கள்.

கேள்வி:- திருமங்கலத்தில் பேசிய ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறாரே?

பதில்:- தேர்தலை நடத்துவது தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்திய தேர்தல் கமிஷன். ஜெயலலிதாவும், வைகோவும், தா.பாண்டியனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குற்றஞ்சாட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும். அவர்களும் பதிலளித்து விட்டார்கள். இருப்பினும் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்கள்.

கேள்வி:- "இரண்டு ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறிவிட்டு, பொருளாதார மண்டலம், தகவல் தொழில் நுட்ப பூங்கா என்று விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஏழைகளின் நிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த நிலங்களையெல்லாம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதுதான் அ.தி.மு.க. ஆட்சி செய்யப்போகும் முதல் வேலை'' என்று ஜெயலலிதா திருமங்கலத்தில் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தை தி.மு.கழக அரசு கொண்டு வந்தது உண்மை தான். அந்த திட்டத்தின் கீழ் 15-12-2008 வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 39 ஏக்கர் நிலம், 1 லட்சத்து 74 ஆயிரத்து 853 பேருக்கு வழங்கப்பட்டது.

அவர்கள் எல்லாம் அந்த நிலத்தில் உழுது பயிரிட்டு பயன் பெற்று வருகிறார்கள் என்று பேட்டியும் கொடுத்துள்ளார்கள். அவர்களிடம் உள்ள நிலத்தைத் தான் மீட்கப் போவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே மீட்கப்பட வேண்டியது ஜெயலலிதா கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டு கைவசப்படுத்தப்பட்டுள்ள தலித்களுக்கு சொந்தமான சிறுதாவூர் பகுதிகளிலே உள்ள நிலங்களைத் தான்! அதைத்தான் தற்போது அவர்களுடன் கூட்டணியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனும் கூறி வருகிறார்.

கேள்வி:- நடுநிலையோடு இருந்து பணியாற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் சில அதிகாரிகள் இப்போதெல்லாம் ஒரு தரப்பாகப் பேசுவது சரியா?

பதில்:- ரத்தம் தண்ணீரை விட வலிமை வாய்ந்தது என்பது பழமொழி.


கேள்வி:- ஜெயலலிதா இடைத்தேர்தல் பிரசாரத்தில் இன்றைய ஆட்சியில் வன்முறை நடைபெறுவதாக கூறியிருக்கிறார். அவருடைய ஆட்சியிலே என்ன நிலை?

பதில்:- 15-8-1981-ல் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது திருச்சியில் காரை மறித்து தாக்குதல்.

29-10-1991 அன்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் காரில் சென்ற போது தாக்குதல்.

13-3-1992 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பி.சொக்கலிங்கம் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். 19.5.1982 அன்று ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சந்திரலேகா மீது எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ஆசிட் பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்டார்.

10.12.92 அன்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ராஜாராம் வீட்டிற்குள் 15 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

14.12.92 அன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே 100 பேர் கொண்ட ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார்.

11.5.93 அன்று எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் தலைவராக இருந்த எம்.ஜி.சுகுமார் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி முடிந்து வந்து கொண்டிருந்து போது தாக்கப்பட்டார்.

19.6.94 அன்று திருச்சியில் எஸ்.ஆர்.ராதா அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார்.

12.7.94 அன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனை வீட்டிலேயே சென்று பத்து பேர் தாக்கினர்.

21.7.94 அன்று வழக்கறிஞர் விஜயன் சென்னையில் அவரது வீட்டிலே தாக்கப்பட்டார்.

10.11.94 அன்று உப்பிலியாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் சென்னையில் தாக்கப்பட்டார்.

2.12.94 அன்று மத்திய தேர்தல் கமிஷனர் சேஷன் விமான நிலையத்தில் கேரோ செய்யப்பட்டு, பின் அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் தாக்கப்பட்டார்.

8.2.95 அன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மோகன் என்பவர் அரிவாளால் தாக்கப்பட்டார்.

30.5.95 அன்று கூடுதல் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டார்.

18.6.2001 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாண்டி என்பவர் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.

9.8.2001 அன்று தமிழக முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் கணேசபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

31.12.2001 அன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.பாலன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

12.3.2002 அன்று கோவை ரத்தினசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார்.

28.3.2003 அன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

1.5.2002 அன்று தி.மு.க.வை சேர்ந்த வெங்கடேசன் தர்மபுரி மாவட்டத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

3.6.2002 அன்று சென்னையில் தீனதயாளன் என்ற சிவசேனா நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

26.7.2004 அன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தாக்கப்பட்டார்.

3.9.2004 அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்.

31.12.2004 அன்று நெல்லையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

4.2.92 அன்று எம்.ஜி.ஆர். நினைவில்ல பொறுப்பாளர் முத்து மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

13.6.2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

10.7.2003 அன்று மதுரையில் செரினா மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

14.8.91 அன்று தராசு அலுவலகம் மீது தாக்குதல்.

12.9.2002 அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாளமுத்து நடராஜன் என்பவர் கொலை.

24.3.2004 அன்று திருவேற்காட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த கஜேந்திரன் கொலை.

9.10.2005 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை.

23.1.2004 அன்று திருவரங்கத்தில் திருமண மண்டபம் தீ விபத்தில் 61 பேர் உயிரிழப்பு.

16.7.2004 அன்று கும்பகோணத்தில் பள்ளியில் தீ விபத்து-19 குழந்தைகள் உயிரிழப்பு.

6.11.2005 அன்று சென்னையில் நிவாரண நிதி வழங்கப்பட்டபோது நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு.

18.12.2005 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நிவாரண நிதி வழங்கப்பட்ட பொது நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு. 37 பேர் காயம்.

11.12.2004 அன்று தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வல்லம் இரா.அறிவழகன் கொலை செய்யப்பட்டார்.

கவர்னர் சென்னாரெட்டி காரை வழிமறித்து தாக்கப்பட்டது; சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தாக்கப்பட்டது; நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உறவினர் மீதே கஞ்சா வழக்கு என்று எழுதிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றவை. அவர்தான் தி.மு.க. ஆட்சியில் வன்முறை என்கிறார்.



கேள்வி:- லாரிகள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடிக்கிறதே?

பதில்:- லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் நலன், நாட்டின் பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் மீண்டும் அமர்ந்து பேசி லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு சுமுகமான முடிவினை உடனடியாகக் காண வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: