Saturday, January 3, 2009

"இலங்கை போரில் விடுதலைப்புலிகள் பின்தங்கியிருப்பது போர் தந்திரம்தான்" - வைகோ கருத்து


மதுரை, ஜன.4-

"இலங்கை போரில் விடுதலைப்புலிகள் பின்தங்கியிருப்பது போர் தந்திரம்தான். நிச்சயம் அவர்கள் வெல்வார்கள்'' என்று வைகோ கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 250-வது பிறந்தநாள் விழா நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றி விட்டதாக சிங்கள அரசு கொக்கரிக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. ஐ.நா.சபையின் தடை உத்தரவை மீறி சிங்கள அரசு குண்டுகளை வீசி வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே மிகவும் கொடூரமானவராக நடந்து கொள்கிறார். அவரது நடவடிக்கை நீடிக்காது.

தமிழினத்தை அழிக்கும் இலங்கை ராணுவத்துக்கு உதவும் மத்திய அரசை கண்டிக்கிறோம். போரில் விடுதலைப்புலிகள் பின்தங்கியிருப்பது ஒரு போர் தந்திரம்தான். நிச்சயம் அவர்கள் வெல்வார்கள். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

திருமங்கலம் தொகுதியில் அடியாட்கள் மற்றும் பண பலத்தால் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். அந்த தொகுதி முழுவதும் பணம் விதைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் செயல்பட்டதால்தான் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகிறது. அதன் கட்டுப்பாட்டில் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: