
புதுடெல்லி, ஜன.15-
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், நாளை (வியாழக்கிழமை) இலங்கை சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று, தமிழக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று, மத்திய அரசும் கருத்து தெரிவித்து இருந்தது.
தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து இருந்தார். ஆனால், அவருடைய இலங்கை பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இலங்கை செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அவர், நாளை (வியாழக்கிழமை) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். இலங்கையின் வெளியுறவு மந்திரி உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சு நடத்துகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு போன்ற முக்கிய தளங்களை கைப்பற்றிய இலங்கை ராணுவம், தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment