Thursday, November 13, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் கிடையாது டெல்லியில் மன்மோகன்சிங்கை சந்தித்தபின் ராஜபக்சே பேட்டி

புதுடெல்லி, நவ.14-
`இலங்கையில் முற்றிலுமாக தீவிரவாதத்தை ஒடுக்கியே தீருவோம். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை'
என்று டெல்லியில் நேற்று அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்.


இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரினால், லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் காடுகளில் அகதிகளாக அவதிப்படுகின்றனர்.

எனவே, போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, சட்டசபையிலும் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களுக்காக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த வங்காள விரிகுடா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே வந்தார். மாநாட்டில் பங்கேற்று பேசிய பிறகு, பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று மாலையில் அவர் தனியாக சந்தித்து பேசினார்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் பெரிய அளவில் வெடித்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை முதன் முறையாக அதிபர் ராஜபக்சே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, ராஜபக்சேயிடம் இலங்கை நிலவரம் குறித்து மன்மோகன் சிங் கேட்டார். மேலும், அப்பாவி தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த ராஜபக்சே, "விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்த முடியாது. அரசியல் தீர்வு காண்பதற்கு முன்பாக தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முடிவு செய்து இருக்கிறோம். இலங்கை மக்களான அப்பாவி தமிழர்களின் நலன்களை நாங்கள் பாதுகாப்போம்'' என்று தெரிவித்தார்.


மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜபக்சே கூறியதாவது:-

இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். உங்களுக்கும், இந்திய பிரதமருக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்துக்கும் இந்த உறுதியை நாங்கள் (இலங்கை அரசு) அளிக்கிறோம். இலங்கை குடிமக்களான தமிழர்களை பாதுகாப்பது என்னுடைய கடமை.

இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்கள் அனைத்தும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா.சபை மூலமாக வழங்கப்படும். கடை கோடியில் உள்ள தமிழனுக்கும் நிவாரண உதவி கிடைக்கச் செய்யப்படும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளால் இலங்கையின் ஜனநாயக பாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழுக்களை ராணுவ ரீதியிலே சந்திக்க வேண்டும். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண, தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு தீவிரவாதம் செல்வதை அனுமதிக்க முடியாது. எனவே, போர் நிறுத்தம் கிடையாது.

ஏற்கனவே, பலமுறை போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அந்த சமயங்களில் எல்லாம், விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தை அதிகரித்து விட்டு மீண்டும் தாக்குதலை தொடங்கினர். இப்போதும் கூட, சமரச தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஆர்வம் காட்டி வருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இளம் போராளியாக இருந்தவர்தான் கிழக்கு மாகாணத்தில் இன்று முதல்-மந்திரியாக இருக்கிறார். பிள்ளான், கருணா ஆகியோருக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. மேலும், 1200 தமிழர்களை போலீஸ் வேலைக்கு தேர்வு செய்து உள்ளோம். அவர்களில் பலருக்கு இந்தியாவில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழர்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் இலங்கை அரசு செய்து வருகிறது. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்ட திருத்தம் நீண்ட நாளாக அமல்படுத்தாமல் இருந்தது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்தி வருகிறோம்.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறுவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசினேன். வங்காள கடல் வழியாக விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதாக கருதப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய இந்த பிரச்சினை குறித்து இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

சட்டவிரோதமாக நிதி திரட்டுவது, ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்ற செயல்களை வங்காள விரிகுடா கடல் வழியாகவே விடுதலைப் புலிகள் செய்து வருவதாக இலங்கை அரசு நம்புகிறது. எனவே, இந்த பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த வங்காள விரிகுடா நாடுகள் கூட்டமைப்பு சார்பில் செயல்திட்டம் வகுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜபக்சே தெரிவித்தார்.

No comments: