Monday, November 24, 2008

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்திய கம்னிஸ்டு கட்சி பங்கேற்காது


சென்னை, நவ.25-
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி மறியல் போராட்டம் நடத்துவதால், சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்திய கம்னிஸ்டு கட்சி பங்கேற்காது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய கம்னிஸ்டு கட்சி பல்வேறு அரசியல் கட்சிகளோடு கூடி 25-11-2008 (இன்று) அன்று இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற மத்திய அரசை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திட விரிவான ஏற்பாடுகளோடு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு திடீரென 25-11-2008 அன்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் இந்திய கம்னிஸ்டு கட்சி பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் உடனடி கோரிக்கையான, இலங்கையில் உடனடி போர் நிறுத்தம், நடைபெற மத்திய அரசை வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தியும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன் இந்த மறியல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தத்திற்காக, மற்ற அரசியல் கட்சிகளுடனும், பொதுமக்களின் பேராதரவுடனும் தொடர்ந்து இந்திய கம்னிஸ்டு கட்சி போராடும். தமிழக மக்கள் எந்த குழப்பதிற்கும் ஆளாகாமல் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என இந்திய கம்னிஸ்டு கட்சி அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

No comments: