Sunday, November 23, 2008

இலங்கையில் கடுமையான போர்: கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவிப்பு நாளை மறுநாள் பிரபாகரன் 54-வது பிறந்த நாள்




கொழும்பு, நவ.24-
இலங்கையில் விடுதலைப்புலி களின் தலைநகரான கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே நாளை மறுநாள் 54-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தினமாக விடுதலைப்புலிகள் கொண்டாட உள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறது. மன்னாரில் இருந்து கிளிநொச்சியின் மூன்று எல்லை வழியாக ராணுவத்தின் 1 மற்றும் 57-வது படைப்பிரிவுகள் முன்னேறி வருகின்றன. வடக்கு அடம்பன், தெற்கு அடம்பன், தெருமுறிகண்டி ஆகிய மூன்று இடங்களில் நேற்று காலையில் இருந்தே கடுமையான சண்டை நடக்கிறது.
கிளிநொச்சியை சுற்றிலும் அகழி போல பெரிய குழிகளை தோண்டி வைத்து இருப்பதால் ராணுவத்தால் வேகமாக செல்ல முடியவில்லை. விடுதலைப்புலிகளும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். எனவே, ராணுவத்தினர் முன்னேறி செல்வதற்காக போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.

கிளிநொச்சியின் புறநகர் பகுதியில் ராணுவம் முகாமிட்டு இருப்பதாகவும் அந்த இடங்கள் வரை கைப்பற்றி விட்டதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதுபோல கிளிநொச்சியில் உள்ள கோகாவில் பகுதியிலும் ராணுவம் போரிட்டு வருகிறது. ஏ-9 நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
இந்த சண்டையின்போது விடுதலைப்புலிகளுக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்தது. அவர்களுடைய ரேடியோ தகவல்களை இடைமறித்து கேட்டபோது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. ஆனால், ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப் படவில்லை.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருக்கும் முல்லைத்தீவிலும் அந்தன்குளம் பகுதியில் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அக்கராயன்குளம், நிவில் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை முதல் சண்டை நடைபெறுகிறது. அந்தன்குளம் பகுதியில் ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் கிலாலி, முகமாலை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ராணுவத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதற்கிடையே விடுதலைப்புலிகள் பகுதியில் இருந்து ஓமந்தை வழியாக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 80 தமிழர்கள் வந்ததாக ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 1972-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி அன்றுதான் அந்த அமைப்பின் முதல் நபரை ராணுவம் கொன்றது. அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வாரத்தை `மாவீரர்கள் வாரமாக' விடுதலைப்புலிகள் கடைப்பிடிக்கின்றனர்.
மேலும், நவம்பர் 26-ந் தேதி (நாளை மறுநாள்) விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 54-வது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும், விடுதலைப்புலிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் வகையில் எழுச்சியுரை ஆற்றுவது பிரபாகரன் வழக்கம். எனவே, இந்த வாரத்தில் மிகப்பெரிய அளவில் விடுதலைப்புலிகளின் பதிலடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் போர் நடைபெறும் வடக்கு பகுதிக்குள் செல்ல பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இலங்கை அரசு தடை விதித்து இருக்கிறது. எனவே, அங்கு உள்ள உண்மை நிலவரத்தை முழுமையாக அறிய முடிவதில்லை. இரு தரப்பினரின் சேதங்கள் குறித்தும் தெரிவதில்லை.

No comments: