Friday, November 7, 2008

தமிழக சட்டசபை 10-ந்தேதி தொடங்குகிறதுசபாநாயகர் ஆவுடையப்பன் அறிவிப்பு
சென்னை, நவ.8-
தமிழக சட்டசபை 10-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழக சட்ட சபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி காலை 9-30 மணிக்கு தொடங்குகிறது. திருக்குறள் படித்த பிறகு மறைந்த முன்னாள் எம்.எம்.ஏ.க்கள் சோம சுந்தரம், விஜேந்திரய்யா, ஈஸ்வரன், தவசி, தங்கவேலு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
அதைத்தொடர்ந்து கேள்வி நேரம் இடம் பெறும். அதன்பின், தமிழக மதிப்பு கூட்டு வரி, புறநகர் போலீஸ் கமிஷனர் ஆணையம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட திருத்த ஆணை, உள்பட 10 சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சட்ட முன்வடிவு(மசோதா) அறிமுகம் செய்த பிறகு அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி எத்தனைநாள் சட்டசபையை நடத்துவது என்று முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு சபாநாயகர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துவிட்டாரா?
பதில்:- பத்திரிகையில் தான் நான் படித்தேன். இதுவரை ராஜினாமா கடிதம் வரவில்லை.
கேள்வி:- குளிர்கால கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெற உள்ளது?கடந்த முறையைவிட அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:- கடந்த முறை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த முறை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
கேள்வி:- நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது பற்றி அ.தி.மு.க. கடிதம் கொடுத்து இருக்கிறார்களா?
பதில்:- தரவில்லை.
கேள்வி:- துணை சபாநாயகரிடம் இது பற்றி கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறதே?
பதில்:- அப்படி தகவல் எதுவும் இல்லை.
கேள்வி:- உரிமை மீறல் பிரச்சினை எத்தனை நிலுவையில் உள்ளன?
பதில்:- உரிமை மீறல் பிரச்சினை இது வரை 10 நிலுவையில் உள்ளன.
கேள்வி:- சட்ட சபை சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளுடன் கூட்டம் நடத்துவீர்களா?
பதில்:- அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்வார்கள். எனவே சட்டசபை கூட்டம் சுமூகமாக நடக்கும் .இவ்வாறு சபாநாயகர் ஆவுடையப்பன் பேட்டி அளித்தார்.

No comments: