Sunday, November 23, 2008

தமிழக முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை அகதிகளை திரும்பி செல்ல மத்திய அரசு அறிவிக்கவில்லை தமிழக அரசு விளக்கம்







சென்னை, நவ.24-
தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களை திரும்பி செல்ல மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் தந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதால், இலங்கைக்கே திரும்பி செல்ல வேண்டும் என்று, மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி ஒன்றின் மாநில செயலாளர் கூறியுள்ளது இன்று (23-11-2008) அந்த கட்சியின் தமிழ் நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் திரும்பி செல்ல வேண்டும் என்று எந்தவித அறிவிப்பும் அரசால் செய்யப்படாத நிலையில், அவர் அப்படி கூறியிருப்பது தவறான செய்தி மட்டுமல்ல, தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் பீதியையும், கலக்கத்தையும் ஏற்படுத்திடக் கூடியதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 115 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கிவரும் அனைத்து வகையான உதவிகளையும் பெற்று அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியைத் தமிழக அரசு வன்மையாக மறுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: