Tuesday, April 21, 2009

இன்றைய செய்திகள் (ஏப்ரல் இருபத்தியொன்று)

சரண் அடைய பிரபாகரனுக்கு விதித்த கெடு முடிந்தது: ராணுவம் இறுதிகட்ட தாக்குதல்

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே 20 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்கு விடுதலைப்புலிகள், 2 லட்சம் தமிழர்களும் உள்ளனர். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தினமும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வந்தனர். இதை ஐக்கிய நாட்டு சபையும், சர்வதேச நாடுகளும் கண்டித்தன. அப்பாவி மக்கள் உயிரிழப்பை தடுக்கும்படி கேட்டு கொண்டன. ஆனாலும் இதைப்பற்றி கவலைப்படாத சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதியை நாலா புறமும் முற்றுகையிட்டு இருந்த ராணுவம் நேற்று அதிரடியாக உள்ளே புகுந்து தாக்கியது. பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த ராணுவம் அங்கிருந்த ஒரு பகுதி மக்களை வெளியே கொண்டு வர முயற்சித்தது. அதற்கு வெற்றி கிடைத்தது. 35 ஆயிரம் மக்களை அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றியது.

மேலும் அங்கு தங்கியிருக்கும் மக்களையும் வெளியே கொண்டு வர ராணுவம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாக தகவல் வந்தாலும் அரசு தரப்பில் 70 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக கூறி வந்தனர்.

அதில் 35 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதால் இதை பெரிய வெற்றியாக சிங்கள அரசு கருதுகிறது. இருப்பினும் இருக்கும் மக்களையும் வெளியேற்றி விட்டு விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட ராணுவம் தயாராகி வருகிறது.

மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் சில மணி நேரத்திலேயே விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விடலாம் என்று நினைக்கின்றனர். எனவே அதிபர் ராஜபக்சே பிரபாகரனுக்கு நேற்று 24 மணி நேரம் கெடு விதித்தார். கெடுமுடிவதற்குள் பிரபாகரனும் மற்றவர்களும் சரண் அடைய வேண்டும் இல்லை என்றால் விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விடுவோம் என்று அவர் எச்சரித்தார்.

இந்த கெடு நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்த சிங்கள ராணுவம் தயாராகி வருகிறது. விடுதலைப்புலி கட்டுப்பாட்டு பகுதியின் கிழக்கே கடல் உள்ளது. இங்கு கடற்படை தயாராக நிற்கிறது. மற்றும் மேற்கு, வடக்கு, தெற்கு பகுதியில் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளே அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்த தயாராக நிற்கின்றனர்.

எனவே இதுவரை இல்லாத அளவுக்கு எந்த நேரத்திலும் பெரிய தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சண்டையே இறுதி போராக இருக்கும். விடுதலைப்புலிகளும், இறுதி கட்டத்தில் இருப்பதால் அவர்களும் புதிய முறையில் தாக்குதல்களை நடத்தி சிங்கள படையை நிலை குலைய செய்ய வாய்ப்பு உள்ளது.

பிரபாகரன் என்ன முடிவு எடுக்க போகிறார்? அவர் தப்பி செல்வாரா? அல்லது கடைசி வரை எதிர்த்து போரிடுவாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் ஈழப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்துவிடும் நிலையை எட்டி உள்ளது. நேற்று 35 ஆயிரம் தமிழர்களை வெளியே கொண்டு வந்ததற்காக இலங்கை அரசுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் வைகோவை எதிர்த்து கார்த்திக் போட்டி

விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவை எதிர்த்து நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் களமிறங்குகிறார். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன . விருதுநகர் தொகுதியில் கார்த்திக்கும், தேனியில் பார்வதியும் போட்டியிடுகின்றனர்.

காக்கிநாடாவில் கோர்ட்டு நீதிபதி மீது ஆசிட் வீச்சு

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் இன்று மதியம் ஒரு வழக்கின் விசாரணையை நீதிபதி நாகமாருதி சர்மா நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைக்காக வந்திருந்த சூரிய நாராயணா(45) என்பவர் திடீரென்று நீதிபதியை நோக்கி ஆசிட்டை வீசினார். இதில் நீதிபதியின் கழுத்து, காது ஆகிய இடங்களில் ஆசிட் கொட்டி உடல் வெந்தது. இதனால் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். உடனடியாக நீதிபதியை காக்கி நாடா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆசிட் வீசிய சூரியநாராயணாவை போலீசார் கைது செய்தனர். நீதிபதி மீது அவர் எதற்காக ஆசிட் வீசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா பதவியேற்றார்


தலைமை தேர்தல் கமிஷனர் கே.கோபாலசுவாமி நேற்று ஓய்வு பெற்றார். புதிய தலைமை தேர்தல் கமிஷனராக 64 வயதான நவீன் சாவ்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். அடுத்த ஆண்டு ஜுன் 29-ந் தேதி வரை அவர் அந்த பொறுப்பில் இருப்பார். இதே போல 3-வது தேர்தல் கமிஷனராக மின்துறை செயலாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வி.எஸ்.சம்பத் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட நவீன் சாவ்லா கூறும் போது 3 தேர்தல் கமிஷனர்களும் இணைந்து முடிவு எடுப் போம் என்றார். கட்சி சார்பாக செயல்படு வதாக கூறி நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோபாலசுவாமி ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க வில்லை.

எங்கும் மரண ஓலம்: ராணுவம் குண்டு வீச்சில் 1496 தமிழர்கள் பலி!.3,333 பேர் படுகாயம்

விடுதலைப்புலிகளிடம் இருக்கும் முழு பகுதியையும் பிடிப்பதற்காக கடந்த ஒரு வாரமாக சிங்கள ராணுவம் ஆவேச தாக்குதலை நடத்தி வருகிறது.

புதுக்குடியிருப்புக்கு கிழக்கே விடுதலைப்புலிகள் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் பாதுகாப்பு அரணை அமைத்து இருந்தனர் இதை தகர்த்து கொண்டு சிங்கள படை நேற்று உள்ளே புகுந்தது. அந்த பகுதியில் ஏராளமான தமிழர்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர். அவர்கள் கூட்டத்துக்குள் புகுந்து ராணுவத்தினர் சரமாரியாக சுட்டனர். இதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. மக்கள் அங்கும், இங்கும் ஓடினார்கள். இந்த குழப்பத்தில் ஏராளமான மக்கள் அங்கிருந்து வெறியேறி அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்களை சிங்கள ராணுவம் மனித கேடயமாக பிடித்து கொண்டது. தமிழர்களை முன்பே அனுப்பி பின்னால் இருந்தபடி விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி சிங்கள ராணுவம் வேகமாக உள் பகுதிக்குள் முன்னேறியது.

அதே நேரத்தில் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியது. கொத்து குண்டுகள், வெள்ளை புகைகளை கக்கும் ரசாயன குண்டுகள் ஆகியவற்றையும் வீசினார்கள். இதில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளை புகையால் குறிப்பிட்ட தூரம் வரை எதையும் பார்க்க முடியவில்லை. இதனால் குழப்பம் அடைந்து மக்கள் வெவ்வேறு திசையில் ஓடினார்கள். இன்று காலை வரை நடந்த குண்டு வீச்சில் 1496 பேர் பலியாகி உள்ளனர். 3,333 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஒரே நாளில் இவ்வளவு பேர் பலியானதால் எங்கும் மரண ஓலமாக இருந்தது. தெருக்களில் ஆங்காங்கே பிணங்கள் சிதறி கிடந்தன. காயம் அடைந்தவர்களையும் யாரும் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவில்லை. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தால்நேற்று ஏராளமான குழந்தைகள், பெற்றோர்களை பிரிந்து திசைமாறி சென்று விட்டனர். அவர்களை பெற்றோர்கள் தேடி அலைந்தது பரிதாபமாக இருந்தது.

தேசத்தின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணம் காங்., : ராஜ்நாத்சிங்

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் தேர்தல் பிரசார‌த்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் தேசத்தின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி போன்ற கட்சிகள் அரசியல் மனோதிடம் இல்லாத கட்சிகள் . இவ்வாறு காங்., அரசியல் மனோதிடம் இல்லாமல் இருப்ப‌தால் தான் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன. சமாஜ்வாடி கட்சியும் , பகுஜ் சமாஜ் கட்சியும் ஜாதி, மத அடிப்டையில் ஓட்டு சேகரிக்க கனவு காண்கின்றன . அது பலிக்காது. முன்பிருந்ததை விட தே.ஜ., கூட்டணி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது . ஐ.மு., கூட்டணியோ சி‌தறி கிடக்கிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

முதல்வர் பதவியை உணரவில்லை கருணாநிதி : ஜெ., தாக்கு

முதல்வர் பதவியை உணர்ந்து கருணாநிதி செயல்படவில்லை என முதல்வர் கருணாநித மீது அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றச்சாட்டி உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார். அப்போது, பிரபாகரன் எனது நண்பன். அவர் பயங்கரவாதி அல்ல என கருணாநிதி தெரிவித்தது குறித்த தங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த செய்தியில் இருந்தே, அவர் முதல்வர் பதவியை உணர்ந்து செயல்படவில்லை என்பது தெரிகிறது. கருணாநிதி விஷயத்தில் சோனியா மவுனம் காப்பது ஏன்? சோனியா தானே காங்கிரஸ் கட்சி தலைவர்? இது குறித்து அவர் நிச்சயம் கருத்து தெரிவிக்க வேண்டும். ஆனால், இதற்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலும், இது குறித்து எந்த கருத்தையும் சோனியா வெளியிடாமலும் இருப்பது பெரும் வருதத்திற்குரியது.

பிரபாகரன் குறித்த கருணாநிதி செய்திக்காக, அவரை போலீசார் கைது செய்யவேண்டும். ஆனால் தமிழக போலீசார் முதல்வர் கைபிடிக்குள் இருக்கும் போது, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.‌ இது குறித்து மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்த கேள்விக்கு, சரத்பவார் முதர்ச்சியும், அனுபவமும் உள்ள மூத்த அரசியல் தலைவர், அவர் நிச்சயம் பிரதமர் வேட்பாளராக முடியும் என தெரிவித்தார்.


மன்மோகன்சிங்கை பிரதமராக ஏற்க முடியாது: லாலு பிரசாத் அறிவிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது என்று, லாலு பிரசாத் யாதவ் அறிவித்து இருக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-"மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. தேர்தலுக்குப்பின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுப்பதுடன், பிரதமர் யார் என்பதையும் தீர்மானிப்போம். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பதில் உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. பீகார் மாநிலத்தை பொறுத்தவரை, இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், அவர்களுடைய கட்சியின் பலம் குறித்து சோனியாகாந்திக்கு தவறான தகவலை தெரிவித்ததால், பல இடங்களில் எங்களுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலுக்குப்பிறகு அவர்களால் சோனியாவின் முகத்தில் விழிக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மதவாதமும் , பயங்கரவாதமும் தலைதூக்க முடியாது : மன்மோகன்சிங்

மதவாதமும் , பயங்கரவாதமும் நாட்டில் தலைதூக்க முடியாது என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவம் போன்றவை இனிமேல் நடைபெறாது . எந்த ஒரு மதத்தையும், ஜாதியையும் குறி வைத்து தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்த இறுதிக்கெடு விதிக்க வேண்டும்: பிரதமர்- சோனியாவுக்கு கருணாநிதி தந்தி

முதல்-அமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோச மான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும் படி வற் புறுத்தி உள்ளனர். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும் படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும், லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதா? தேர்தல் கமிஷனர்களுக்கு மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்திரபிரதேச முதல்-மந்திரியுமான மாயாவதி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக தேர்தல் கமிஷனர்கள் செயல் படுகிறார்கள். அவர்கள் மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். தேர்தல் கமிஷனர்கள் நவீன் சாவ்லாவும், என்.ஒய்.குரேஷியும் காங்கிரஸ் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நடவடிக்கையால் நாட்டில் அமைதியாகவும், சுதந்திர மாகவும் தேர்தல் நடை பெறாது. இவர்களின் இந்த நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல்லில் விஜயகாந்த் பிரசாரம் : திமுக, பாமக மீது காட்டம்

வாங்கும் திறன் அரசியல் வாரிசுகளிடம் தான் அதிகரித்துள்ளது என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசாரம் செய்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் மகேஷ்வரனை ஆதரித்து திருச்செங்கோட்டில் பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த் வாங்கும் திறன் மக்களிடம் அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். வாங்கும் திறன் அவர்களது வாரிசுகளிடம் தான் அதிகரித்துள்ளது என கூறினார். மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் சேர 2 ஓட்டு பெட்டி வைக்கப்பட்டது. தனித்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்க பெட்டி வைக்கவில்லை. அவர்களிடம் தனித்து நிற்க தைரியம் இல்லை என பாமகவை விஜயகாந்த் விமர்சித்தார்.

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து ஐகோர்ட்டு வக்கீல்கள் மீண்டும் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 1 மாதம் போராட்டம் செய்தனர். பின்னர் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசை கண்டித்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் இன்று மீண்டும் போராட்டம் செய்தனர். ஐகோர்ட்டு வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் உண்ணாவிரதம் இருந்தனர். ஐகோர்ட்டுக்கு வக்கீல்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.


520 தொகுதிகளில் பா.., கூட்டணி போட்டி: அருண் ஜெட்லி

லோக்சபா தேர்தலில் 520 தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பொதுச் செயலர் அருண் ஜெட்லி, நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 520 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 427 இடங்களில் பா.ஜ., தனியாகவும், 93 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. நாகலாந்து, மிசோரம் மற்றும் ஆந்திராவில் உள்ள தொகுதிகளில் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

மேலூர் தொகுதியை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்

மதுரை தொகுதியில் மேலூரை குறி வைத்து மு.க. அழகிரி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் இவர் ஓட்டு சேகரித்தார். தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு மேலூரின் 21 வார்டுகளில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது : மேலூர் இ.மலம்பட்டியை சேர்ந்தவன் நான். மேலூர் மில்கேட்டில் 15 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் பஞ்சு மில்லை திறந்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன். சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் தர்பார் ராஜா காரில் தனியாக மேலூரில் சுற்றிக் கொண்டிருந்தார். மார்க்ஸிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ரங்கராஜன் எம்.பி., தலைமையில் செக்கடியில் நடைபெற்றது. ஒரே நாளில் வேட்பாளர்களின் முற்றுகையால் மேலூர் களை கட்டியது.

குழப்பத்தில் இருக்கிறார் கருணாநிதி: தா.பாண்டியன் கடும் தாக்கு

"மாற்றி, மாற்றி சொல்வது கருணாநிதி குழப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது,'' என்று இ.கம்யூ., பொதுச் செயலர் தா.பாண்டியன் கூறினார். வடசென்னை லோக்சபா தொகுதி வேட்பாளரும் இ.கம்யூ., மாநிலச் செயலருமான தா.பாண்டியன், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: "என்.டி.டி.வி.,யில் எனது பேட்டியை முழுமையாக போடவில்லை' என, கருணாநிதி சொல்லியிருக்கிறார். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பிரபாகரன் எனது நண்பர் என கூறியிருக்கிறார். அவர் இன்று ஒன்று பேசுவார்; நாளை வேறொன்று பேசுவார்; மொத்தத்தில் அவர் முழுக்க குழப்பத்தில் இருகிறார் என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.


இலங்கையில் போரை நிறுத்தகோரி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்- பஸ் உடைப்பு

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் இலங்கை அரசை கண்டித்தும், இந்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென் சோனியாகாந்தியின் உருவப்பொம்மையை கொளுத்தினர். அப்போது சேலம் அடிவாரத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் அந்த பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.

அரசியலில் அருமையான தலைவர்கள் உண்டு : இன்போசிஸ் தலைவர்

அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருமையான தலைவர்கள் இருக்கிறார்கள் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : அனைத்து அரசியல் கட்சிகளிலும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் . கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா, வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் போன்ற சிறந்த தலைவர்களை கண்டுள்ளதே ஒரு சிறநத எடுத்துக்காட்டாகும் . அரசியலில் நாகரிகமான தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு குடிமக்களுக்கு உண்டு . தேர்தலில் ஓட்டளிப்பது ஜனநாயகம் வெற்றிப் பாதையில் தான் செல்கிறது என்பதை உணர்த்த உதவும் முதல் படியாகும் . இவ்வாறு ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லை தீவில் இருந்து தப்பி வேதாரண்யத்துக்கு வந்த 19 இலங்கை அகதிகள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீட்பதற்காக முல்லை தீவு மாவட்டத்தில் இலங்கை ராணுவம் உச்ச கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு முல்லை தீவில் இருந்து தப்பி ஓரு படகில் இலங்கை அகதிகள் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டு துறைக்கு வந்தனர். இதில் 8 பெண்களும், 9 ஆண்களும், 2 குழந்தைகளும் இருந்தனர். தப்பி வந்த 19 இலங்கை அகதிகளும், மீனவர் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகள் தப்பி வந்த தகவல் அறிந்ததும் வேதாரண்யம் தாசில்தார் முகமது கமால் பாட்சா, வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி. சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.படகில் தப்பி வந்த இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மீட்பு பணிகள் முடிந்ததும் பிரபாகரன் மீது தாக்குதல் : உதய நாணயகரா

இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா செய்தியாளர்களிடம் பேசியபோது : இலங்கையில் போர் பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அப்பாவி மக்கள் மீட்கப்பட்ட பிறகு பிராபகரன் மீது தாக்குதல் நடத்தப்படும் . இலங்கை அரசு அப்பாவி மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது, அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்பாவிகள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள்:அமெரிக்கா வற்புறுத்தல்

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராபர்ட்வுட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கையில் நிலைமை மோசமாகி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் பலியாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே அப்பாவி மக்கள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள், ராணுவம், விடுதலைப்புலிகள் இருவருமே மக்கள் உயிருக்கு உத்தர வாதம் வழங்க வேண்டும். மனிதாபிமான உதவிகளை அந்த மக்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும். அங்கும் நடக்கும் கொடூரங்களை தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

கடுமையான போட்டியை சந்திக்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்

பீகார் லோக்சபா தேர்தலில் கடுமையான போட்டியை ஜார்ஜ் பெர்னாண்டஸ் சந்திக்க உள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் உட்கட்சிப் பூசல் வெடித்ததை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மூத்த தலைவர் திக் விஜய்சிங் ஆகியோருக்கு லோக்சபா தேர்தலில் சீட் வழங்கப் பட வில்லை. இருபது ஆண்டுகளாக தொடர்ந்து எல்லா லோக்சபா தேர்தல்களிலும் போட்டியிட்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தற்‌போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்பதை கருத்தில் கொண்டே அவருக்கு சீட் வழங்கப் படவில்லை என ஜக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்தது. இதனைதொடர்ந்து, சுயோச்சையாக முஜாப்பர்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார். ஜார்ஜ் பெர்னாண்டசின் உடல் சோர்ந்து விட்டாலும், அவரது மூளை மிகவும் கூர்மையாக செயல்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் ‌வெற்றி பெற இன்னும் சில கைகளுடன் இணைய வேண்டியது அவசியம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன.


இலங்கையில் மனிதநேயம் மங்கிவிட்டது : அமெரிக்கா கவலை

இலங்கையில் போர் பகுதியில் கடைசி கட்ட தாக்குதல் நடந்து வரும் நிலையில், மனிதநேயம் மங்கி விட்டது என அமெரிக்கா கவலை‌ தெரிவித்துள்ளது. போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது . இலங்கை அரசும் , விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும் . அமெரிக்கா உலக நாடுகளுடன் இணைந்து இந்த பிரச்னையில் எவ்வளவு தூரம் உதவ முடியுமோ அதை செய்யும் . இவ்வாறு செய்தி தொடர்பாளர்(பொறுப்பு) ராபர்ட் வுட்ஸ் தெரிவித்துள்ளார்.

மீலாது சமய மத நல்லிணக்க விழா

செங்குன்றம் வட்டார இம்தாத் பைத்துமால் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நலச்சங்கம் சார்பில், மீலாது சமய மத நல்லிணக்க விழா பொதுக்கூட் டம் பஸ் நிலையம் அருகே நடந்தது. செங்குன்றம் ஆயிஷா பள்ளி இமாம் காஜா மொய்னுத் தீன் ஜமாலி தலைமையில், பேராசிரியர் பெரியார் தாசன், சித்தர்கள் ஞானபீட அறக்கட்டளை தலைவர் சற்குரு சவுந்தர் ராஜ், சார்லஸ் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் குறித்து பேசினர். நாரவாரிக்குப்பம் பேரூராட்சி துணைத்தலைவர் ஏ.பாபு, கவுன்சிலர்கள் டி. ரமேஷ், ஏ. திராவிடமணி, எஸ்.எம்.ரமேஷ் உட்பட செங்குன்றம் சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எழும்பூரில் மேலும் ஒரு வக்கீல் சங்கம்

சென்னை எழும்பூர் மாநகர கோர்ட்டில் வக்கீல்களின் புதிய சங்கம்
துவங்கப்பட்டது. இதன் அறிமுக விளக்க கூட்டத்தில் சங்கத் தலைவர் வக்கீல் சேகர் கூறியதாவது:சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல்களின் நலனுக்காக எங்கள் சங்கம் துவங்கியுள்ளோம். இது பதிவு செய்யப் பட்ட சங்கமாகும். நீதிபதிகள் - வக்கீல்கள் உறவை மேம்படுத்த பாடுபடுவோம். சங்கத்தின் மூலமாக சிறந்த நீதிபதிகளை உருவாக்க வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்க உள் ளோம். நவீன சட்ட நூலகமும் உருவாக்கப்படும். வழக்குகளை தாமதமின்றி நடத்துவதற்கான கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பு நீதிமன்றத்திற்கு வழங்கப்படும்.இவ்வாறு வக்கீல் சேகர் தெரிவித்தார். உடன் செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர்.


ஆந்திர மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்: சிரஞ்சீவி

பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:- ஆந்திர மக்கள் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அவர்கள் ஆட்சியில் விவசாயிகள், கூலி தொழிலாளர்களுக்கு எந்த வித உதவியும் அரசு செய்யவில்லை. அவர்கள் உணவுக்கு கூட வழியின்றி தவிக்கிறார்கள். ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை தலை கீழாக மாறும். ஆந்திர மக்கள் இந்த தேர் தலில் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

சரத்பவார் பிரதமராக ஜெயலலிதா ஆதரவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சி.என்.என்-ஐ.பி.என். டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் ஆவதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். சரத்பவாரை பற்றி கேள்வி எழுப்பிய போது, அவர் முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள மூத்த அரசியல் தலைவர் என்றும், அவர் பிரதமர் பதவி வேட்பாளராக முடியும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
#

தங்கம் விலை பவுனுக்கு ரூ.296 அதிகரிப்பு

தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை காணப்படுகிறது. விலை சிறிது குறைவதும் பின்னர் தொடர்ந்து அதி கரிப்பதுமாக உள்ளது. நேற்று 1 பவுன் ரூ.10,488 -க்கு விற்பனை ஆனது. இன்று அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 அதிகரித்து உள்ளது. இன்று 1 பவுன் விலை ரூ.10,784, 1 கிராம் ரூ.1348 க்கு விற்பனை ஆனது.

மாயாவதி பிரிவினைவாத தலைவர் : அமெரிக்க பத்திரிகை கருத்து

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையின் அட்டையில் மாயாவதியின் படம் இடம் பெற்றுள்ளது . அத்துடன் நிற்கவில்லை அந்த பத்திரிகை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசியலில் உயர்வான இடத்தை பிடித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளது .மாயாவதி பிரதமாரானால் பிரிவினைவாதியாக தான் இருப்பார் என அப் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஒபமாவுக்கும் , மாயாவதிக்கும் இடையே இரண்டே ஒற்றுமை தான் உண்டு ; அவை மாயாவதி இளம் அரசியல் தலைவர் , மாயாவதியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் என்பவை மட்டுமே என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது . அரசியலில் குறுகிற காலத்தில் அதிக செல்வத்தை சேர்த்துள்ள மாயாவதி ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுவதாக கூறுகிறார், ஆனால் செய்தவை சொற்பம் எனவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரனுக்கு மன்னிப்பு கிடையாது: ராணுவம் அறிவிப்பு

இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியதாவது:- பிரபாகரன் 10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிக் குள்ளேயே பதுங்கி இருக்கிறார். அவர் சரண் அடைய வேண்டும். அல்லது மர ணத்தை சந்திக்க வேண்டும். அவருக்கு நாங்கள் மன்னிப்பு வழங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: