Thursday, February 26, 2009

இன்றைய (பிப்ரவரி இருபத்தியாறு) செய்திகள்




தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

சென்னை : தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஆஸ்கர் விருதுபெற்ற பின் சென்னை திரும்பிய அவர், சற்றுமுன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இசை மக்கள் மத்தியில் நிலவும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது என்றும், இசைக்கு மொழி கிடையாது, மக்களை நேரடியாக மகிழ்விப்பதே விருதுகள் பெறுவதற்கு சமம் என்று கூறினார். மேலும் தமிழ் திரைஇசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதே தமது லட்சியம் என்றும் தெரிவித்தார்.


இயக்குனர் சீமான் மார்ச் 6ல் நெல்லையில் ஆஜராக உத்தரவு

திருநெல்வேலி : இயக்குனர் சீமான் மார்ச் 6ல் நெல்லையில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் கடந்த 17ம் தேதி ஏற்பாடு செய்த கூட்டத்தில், இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு
ஆதரவாக பேசியதோடு வழக்கமான பாணியில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் காங்கிரசாரை திட்டியும் பேசினார். பாளையங்கோட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருக்கும் சீமானை முறைப்படி கைது செய்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தரப்பினர், நெல்லை
முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் மனு செய்தனர். வழக்கு விசாரணைக்காக சீமானை பாளையங்கோட்டைக்கு அழைத்து வர உத்தரவிடுமாறு கேட்டனர். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் ஹேமா, மார்ச் 6ல் சீமானை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சென்னையில் மேலும் 10 மேம்பாலங்கள் : அமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையில், மேலும் 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது பேசிய அவர், பெரம்பூர், செனோடாப் ரோடு, ரங்கராஜபுரம், கத்திவாக்கம் ஹைவே, ஆலந்தூர் சாலை, மின்ட் தெரு மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வில்லிவாக்கம், ராயபுரம், மணியகரடு மற்றும் சைதாப்பேட்டையிலுள்ள ஜோன்ஸ் ரோடு ஆகிய இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. இது தவிர, மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கொருக்குப்பேட்டையிலுள்ள போஜராஜா ரயில்நிலையம் அருகே ரூ. 6.28 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும், சுமார் ரூ.9.50 கோடி செலவில்
பெரம்பூர் மேம்பாலம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படைவீரர்கள் சரணடைந்தனர் : முடிவுக்கு வந்தது வங்கதேச புரட்சி

டாக்கா : கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் நடந்து வந்த புரட்சி இன்று மாலை முடிவுக்கு வந்தது. ஊதிய உயர்வு விவகாரத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் டாக்கா நகரின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
ராணுவ உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பிணைக்கைதிகளாக பிடித்தனர் எல்லை பாதுகாப்பு படையினர். இதனிடையே புரட்சியை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பு படையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும் கலவரம் கட்டுக்கடங்காமல், நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது. இதனிடையே இன்று
மாலை ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதாக பாதுகாப்பு படையினர் அறிவித்தனர். பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களும் விடுவிக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் நடந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமா

புதுடில்லி : மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மன்மோகன்சிங் அரசில் மின்துறை இணை அமைச்சராக இருப்பவர் ஜெய்ராம் ரமேஷ். ஆந்திராவிலிருந்து காங்.,
சார்பில் ராஜய்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ராம் ரமேசுக்கு மத்திய மின்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஜெய்ராம் ரமேஷ், தேர்தல்
பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர்-நாகூர் அலக ரயில்பாதை நாளை மறுநாள் துவக்கம்

சென்னை : திருவாரூர்-நாகூர் இடையே அகல ரயில் பாதை நாளை மறுநாள்(பிப்.27) திறக்கப்படுகிறது. இதற்கான விழா
திருவாரூர் ரயில் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது. திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு
திருவாரூர்-நாகூர் இடையே பாசஞ்சர் ரயில் போக்குவரத்தை காலை 10 மணிக்கு துவக்கி வைக்கிறார். இந்த ரயில் காலை 11.20 மணிக்கு நாகூர் சென்றடையும். இப்பாதை திறப்பையொட்டி, திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து திருவாரூர் வரை
இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நாளையிலிருந்து நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

குழந்தை நடிகர்களுக்கு மும்பையில் வீடு

மும்பை : ஆஸ்கர் விருதுகளைக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த காரிப் நகர் குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அசார் மற்றும் ரூபினாவின் குடும்பத்தாருக்கு வீடுகள் ஒதுக்கி, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான்
உத்தரவிட்டுள்ளார். நேற்று அசோக் சவானை சந்தித்த போது, இதை தெரிவித்ததாக, மும்பை நகர காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் அறிவித்துள்ளார். முதல்வரின் 2 சதவீத கோட்டாவில் இருந்து இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம் அருகே அரசு பஸ்கள் மோதல் : 3 பேர் பலி

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் என்னுமிடத்தில் செங்கோட்டையிலிருந்து வந்த அரசு பஸ்சும், ராஜபாளையத்திலிருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தி, டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் குருசாமி மற்றும் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

No comments: